பக்கம்:சோழர் வரலாறு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

சோழர் வரலாறு


ராசன்’ என்ற பட்டம் பெற்றவன். இவன் சேரநாட்டுப் போரில் சேனையை நடத்திச் சென்று வெற்றி பெற்றதால் இப்பெயர் பெற்றவன். இவன், குலோத்துங்கன் கோட்டாற்றில் நிறுவிய நிலைப்படைக்குத் தலைவனாக இருந்தவன். இத்தலைவன் கோட்டாற்றில் 'இராசேந்திர சோழேச்சரம்' என்ற கோவிலைக் கட்டினான்[1]. அக்கோவிற்குக் குலோத்துங்கன் நிலதானம் செய்துள்ளான். இத் தலைவனும் சிறந்த சிவபக்தன் என்பது தெரிகிறது.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் பெருஞ் சிறப்புற்ற சேனைத் தலைவன் ஆவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான ‘மணவில்’ என்ற ஊரின் தலைவன். இவன் குலோத்துங்கன் படைத்தலைவனாக அமர்ந்து, பாண்டி நாடு, வேணாடு, மலைநாடு முதலிய நாடுகளோடு போர் நடத்திப் புகழ் பெற்றவன்[2]. இவனால் சோழனுக்கு நிலைத்த புகழ் உண்டானது. இவனது திறமையைக் கண்டு பாராட்டிய குலோத்துங்கன் இவற்குக் ‘காலிங்க ராயன்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தான். இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தான்[3].

இவன் சிறந்த சிவபக்தன். இவன் சிதம்பரம் கூத்தப் பிரானிடம் பேரன்பு பூண்டவன்; அங்குப் பல திருப்பணிகள் செய்தான், தில்லை அம்பலத்தைப் பொன் வேய்ந்தான்; நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுவதற்குரிய மண்டபம், சிவகாம கோட்டம் முதலியன கட்டுவித்தான்; ‘தியாகவல்லி’ முதலிய சிற்றூர்களை இச் சிதம்பரம் கோவிலுக்குத் தேவதானமாக அளித்தான்; மூவர் தேவாரப் பதிகங்-

  1. S.I.I. 3, Vol. No.73
  2. S.I.I. Vol. 4. No.225
  3. V.Ula-K. 78,79.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/272&oldid=1233629" இலிருந்து மீள்விக்கப்பட்டது