பக்கம்:சோழர் வரலாறு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

சோழர் வரலாறு


கொண்டதாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் - தென் ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியும் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்துர் ஆகிய கோட்டங்களையும் தன்னகத்துக் கொண்டதாகும். இராசராசப் பாண்டி மண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய கோட்டங்களைப் பெற்ற நிலப்பரப்பாகும். மும்முடிச் சோழமண்டலம் என்பது ஈழ நாட்டின் வடபகுதிகளாகும். வேங்கை மண்டலம் என்பது கீழைச் சாளுக்கிய நாடாகும். மலைமண்டலம் என்பது திருவாங்கூர், கொச்சி, சேலம் கோட்டத்தின் ஒரு பகுதி, மலையாளக் கோட்டம் ஆகியவை அடங்கிய நிலப்பரப்பாகும். அதிராசராச மண்டலம் என்பது கோயமுத்தூர்க் கோட்டத்தையும் சேலம் கோட்டத்தின் பெரும் பகுதியையும் கொண்ட கொங்குநாடு ஆகும்.

இவன் காலத்தும் மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டன. குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வளநாடுகட்குரிய பெயர்களை நீக்கித் தன் பெயர்களை அவற்றுக்கு இட்டனன்; ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாடு’ என்பதைக் ‘குலோத்துங்க சோழ வளநாடு’ என மாற்றினான்; இராசேந்திர சிங்கவள நாட்டை இரண்டாகப் பிரித்தான்; மேற்குப் பகுதிக்கு ‘உலகுய்யவந்த சோழவளநாடு’ என்றும் கிழக்குப் பகுதிக்கு ‘விருதராச பயங்கர வளநாடு’ என்றும் பெயரிட்டான். இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகளையே எல்லையாகக் கொண்டிருந்தன என்பது கல்வெட்டுகளால் நன்கறியலாம். சயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டை நாடு மட்டும் பல்லவர் காலத்தில் இருந்தாற் போலவே 24 கோட்டங்களைப் பெற்றே இருந்து வந்தது.[1]

அரசியல்: குலோத்துங்கன் சிறந்த அரசியல் நிபுணன், குடிகள் உள்ளத்தைத் தன்பால் ஈர்த்தலே தன் கடமை


  1. S.I.I. Vol. II, No.4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/274&oldid=1233580" இலிருந்து மீள்விக்கப்பட்டது