பக்கம்:சோழர் வரலாறு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

சோழர் வரலாறு


என்றமையால், இவனது அவைக்களத்தில் இருந்த சயங்கொண்டார் தவிர வேறு புலவர் பலரும் இவனை அடிக்கடி சென்று கண்டனர் போலும் இவன் புலவர் பலரை ஆதரித்தான் போலும் இவன் சிறந்த வீரன்! கலக்க முற்றுக் குழம்பிய நிலையில் இருந்த பெருநாட்டைத் தான் பட்டம் ஏற்றவுடன் அமைதிக்குக் கொணர்ந்த அரசியல் நிபுணன், சுங்கம் தவிர்த்துக் குடிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், கடாரம், சீனம், கன்னோசி முதலிய வெளி நாடுகளுடன் அரசியல் உறவுகொண்டு, வாணிகத்தைப் பெருக்கிய அறிஞன் இழந்த ஈழநாட்டை மீட்கும் முயற்சியில் உயிர்களைப் பலியிடாத உத்தமன். சுருங்கக் கூறினால், இராசராசன், இராசேந்திரன் போன்ற பேரரசருள் இவனும் ஒருவன் ஆவன் என்னல் மிகையாகாது.

சமயநிலை : இப்பேரரசன் சிறந்த சிவபக்தன். சோழர் வழிவழியாகவே சிவபக்தராவர். இவன் தில்லைப் பெருமானைப் பேரன்பு பொங்க வழிபட்ட துரயோன்; ஆயின், பிற சமயங்களையும் மதித்துவந்த பெரியோன். இவன் கல்வெட்டுகள் எல்லாச் சமயத்தார் கோவில்களிலும் இருக்கின்றன. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் இவன் பெயரால் எடுப்பித்ததே ஆகும். அதன் பழைய பெயர் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்பது. அஃதன்றி இப்பெரியோன் காலத்தில் இருந்த சிற்றரசர் பலர் வைணவக் கோவில்கள் பல எடுத்துள்ளனர், நிபந்தங்கள் விடுத்துளர். குலோத்துங்கன் கி.பி.1090-இல் நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும் பள்ளிக்கு (புத்த விஹாரத்திற்கு) நிலங்களைத் தானம் செய்துள்ளான். அதனைக் குறிக்கும் செப்பேடுகள் ஹாலந்து நாட்டு ‘லீடன்’ நகரப் பொருட்காட்சி சாலையில் உள்ளன. அவையே 'லீடன் செப்பேடுகள்’ எனப்படும். இவன் காலத்துச் சிற்றரசர் சிலரும் தனிப்பட்டார் சிலரும் சமணப் பள்ளிகட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/276&oldid=1233632" இலிருந்து மீள்விக்கப்பட்டது