பக்கம்:சோழர் வரலாறு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

சோழர் வரலாறு



இத்தொடக்கம் உடைய கல்வெட்டுகள் விக்கிரம சோழன் செய்த சிதம்பரம் கோவில் திருப்பணிகளை விளக்குகின்றன. முன்னவை இவனுடைய இளவரசுப் பருவத்தில் செய்த தென்கலிங்கப் போரைக் குறிக்கின்றன. இவை இரண்டும் வேறு போர்களையோ பிற நிகழ்ச்சிகளையோ கூறவில்லை.

இலக்கியம் : ‘விக்கிரம சோழன் உலா’ என்பது இவனது அவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் பாடியது. அவரே இவனது தென்கலிங்கப் போரைச் சிறப்பித்துப் பரணி ஒன்று பாடியதாக இராசராசன் உலாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன் உலாவும் தக்கயாகப் பரணியில் உள்ள தாழிசையும்[1] குறிக்கின்றன. இப்பரணி இப்பொழுது கிடைத்திலது. ஆதலின் கல்வெட்டு களையும் உலாவையும் கொண்டே இவன் வரலாறு துணியப்படும்.

வேங்கி நாடு : விக்கிரம சோழன் வேங்கி நாட்டை விட்டுத் தந்தையிடம் சென்ற கி.பி. 1178 முதல் அந்நாடு ஆறாம் விக்கிரமாதித்தன் பேரரசில் கலந்துவிட்டது. சோழர்க்கு அடங்கி வேங்கி நாட்டை ஆண்ட வெலனாண்டு அரசர்கள் விதியின்றிச் சாளுக்கியர் ஆட்சியை ஒப்புக்கொண்டு சிற்றரசராக இருந்தனர். ஆனால் கி.பி. 1126-இல் பேரரசனான விக்கிரமாதித்தன் இறந்தான். உடனே வேங்கியின் தென்பகுதி விக்கிரம சோழன் பேரரசிற் கலந்து விட்டது. முன்னர் விக்கிர மாதித்தன் ஆட்சியை ஒப்புக்கொண்ட குண்டுர், கெர்ள்ளிப்பாக்கை முதலிய இடங்களில் இருந்த சிற்றரசர் விக்கிரமசோழனைப் பேரரசனாகத் தங்கள் கல்வெட்டு களிற் குறித்திருத்தலே இதற்குத் தக்க சான்றாகும்[2]. வெலனாண்டுச் சிற்றரசரும் விக்கிரமனைப் பேரரசனாக ஏற்றுக் கொண்டனர்[3].


  1. V.776
  2. 153 of 1897
  3. 163 of 1897
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/280&oldid=493002" இலிருந்து மீள்விக்கப்பட்டது