பக்கம்:சோழர் வரலாறு.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

291




இக்குலோத்துங்கன் தில்லை - கோவிந்தராசப் பெருமானை அப்புறப்படுத்திய செய்தியை ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[1]. அக்குறிப்புடைய பகுதி வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதி செம்மையாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் சிவனையும் திருமாலையும் ஒன்றுபடுத்திச் ‘சங்கர நாராயண’ வடிவத்தில் வழிபாடு ஏற்படுத்திச் சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றுபடுத்த முயற்சி செய்யப்பட்டது. பிற்கால நிகழ்ச்சிகள் இம்முன்னேற்பாட்டிற்கு இடம் தரவில்லை. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேறுபாடு அதிகமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளுள் இரண்டாம் குலோத்துங்கன் செய்தது ஒன்றாகும்[2]. இந்நிகழ்ச்சி தவிர, இவனது அரசாட்சி பல வழிகளிலும் செம்மையான தென்றே கூறி முடிக்கலாம்.


4. இரண்டாம் இராசராசன்
(கி.பி. 1146 - 1173)

அரசியல் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி கி.பி.1150-இல் முடிவுற்றது. ஆயினும், அவன் தன் மகனான இரண்டாம் இராசராசனைக் கி.பி.1146-ஆம் ஆண்டிலேயே அரசனாக்கித் தன்னுடன் கொண்டு நாட்டை ஆண்டு வந்தான் என்பது முன்பே கூறப்பட்டது. ஆதலின், இராசராசன் ஆட்சி கி.பி. 1146-லிருந்தே கணக்கிடப்பட்டது. இவனுடைய கல்வெட்டுகளில் போரைப் பற்றிய குறிப்பே இல்லை. ஆதலின், இவனது ஆட்சி இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியைப் போல அமைதி நிலவிய ஆட்சியாகும் என்பது தெரிகிறது. இவனுடைய கல்வெட்டுகளில் பெரும்பாலன ‘பூ மருவிய திருமாதும்’ என்ற தொடக்கத்தைக் கொண்டவை. அவற்றில் அவனது அரசியல் நேர்மையாக நடந்தது என்பதே குறிக்கப்பட்டுள்ளது.


  1. 36, of 1907
  2. Cholas Vol II, P.74 (Foot-note)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/293&oldid=1234226" இலிருந்து மீள்விக்கப்பட்டது