பக்கம்:சோழர் வரலாறு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

299



திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.[1]

இலங்காபுரி செய்த கொடுமைகளை அறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்னும் சிற்றரசன் ஒருவன் உமாபதி தேவர் என்ற ஞானசிவ தேவர் என்னும் பெரியார் ஒருவரிடம் முறையிட்டான். அவர் ‘ஈழப்படை விரைவில் அழிந்து ஒழியும் கவலற்க’ என்று அருளி 28 நாள் அகோர பூசை செய்தனர். முடிவில் ஈழப்படை தோற்ற செய்தி எட்டியது. உடனே அத்தலைவன் அச்சுவாமி தேவர்க்குக் காஞ்சியை அடுத்த ஆர்ப்பாக்கம் என்னும் சிற்றுரைத் திருப்பாத பூசையாக அளித்தான். இச்செய்தி இராசராசனது 5-ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றதாகும்.[2] எனவே, இலங்காபுரியின் தோல்வி கி.பி.167 அல்லது 1168-இல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.

ஈழத்துடன் செய்த இரண்டாம்போர் : இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும் முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப் பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு ‘வேதவனம் உடையான் அம்மையப்பன்’ ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன் ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன். இவன், முதலில் பல்லவராயனிடம் தோற்றதற்கு வருந்திய ஈழத்தரசன் சோணாட்டைத் தாக்கப் படைகளைப் பலப்படுத்துவதையும், ஊரத்துறை,


  1. இவ்வரலாறு மகாவம்சம், சோழர் கல்வெட்டுகள், பல்லவராயன் பேட்டைச் சாசனம் இவற்றைக் கொண்டு வரையப்பட்டது.20 of1899,433 of1924,465 of 1905.
  2. S.I.I. Vol 6. No. 456.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/301&oldid=1234234" இலிருந்து மீள்விக்கப்பட்டது