பக்கம்:சோழர் வரலாறு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

சோழர் வரலாறு



புலைச்சேரி,மாதோட்டம்,வல்லிகாமம்,மட்டிவால் என்னும் இடங்களிற் கப்பல்களைக் கட்டுவதையும் கேள்வியுற்றான்; உடனே பராக்கிரம பாகுவுடன் பூசலிட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன்மருமகனான சீவல்லபன் என்பவனைப் படையுடன் அனுப்பி ஈழத்தைத் தாக்கத் துண்டினான். சீவல்லபன் சோழர் படையுடன் சென்று மேற்சொன்ன இடங்களிற் பலவற்றை அழித்தான் போரில் யானைகளைக் கைப்பற்றினான்; கிழக்கு மேற்கில் இருபது காதவழியும் தெற்கு வடக்கில் எழுபது காதவழியும் தீ மூட்டி ஊர்களை அழித்தான்; பல தலைவரைக் கொன்றான்; பலரைச் சிறைப்பிடித்தான்.

இந்நிலையில், பராக்கிரமபாகு ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் உடனே குலசேகரனுக்குத் துது விடுத்தான்; நீண்ட காலமாகப் பாண்டியர்க்கும் ஈழ அரசர்க்கும் சோழர்க்கு எதிராக இருந்து வந்த ஒற்றுமையை உணர்த்தித் தன்பால் நட்புக் கொள்ளுமாறும் சோழர்பால் பகைமை கொள்ளுமாறும் செய்தான். சோழர் தயவால் பட்டம் பெற்ற குலசேகரன் நன்றி கெட்டவனாய்ச் சோழர் மீது பகைமை கொண்டான், ஈழத்தரசன் பேச்சைக் கேட்டுச் சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழர்பால் என்றும் அன்பு கொண்டிருந்த ஏழகத்தார்[1] (ஏடகத்தார். மதுரை தாலுக்காவில் உள்ள ஊர்) என்பவரையும் சோழருடைய மறவ சாமந்தரும் குலசேகரன் ஆட்சியில் இருந்தவருமான ‘இராசராச கற்குடி மாராயன்’ இராச கம்பீர ஐந்து கோட்டை நாடாள்வான்’ என்பாரையும் நாட்டைவிட்டு விலக்கினான்; சோழ அரசன் ஆணைப்படி மதுரைவாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்துத் தானைத் தலைவர் தலைகளை அப்புறப்படுத்தினான். பராக்கிரம பாகு குலசேகரன் தானைத் தலைவர்கட்கு அனுப்பிய கடிதங்களும் பரிசுகளும் சோழ சேனைத் தலைவர்களிடம் அகப்பட்டன. இவை அனைத்தையும் கேள்வியுற்ற

  1. S.I.I.I. Vol. 3, p.212.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/302&oldid=493121" இலிருந்து மீள்விக்கப்பட்டது