பக்கம்:சோழர் வரலாறு.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

301


 இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன் பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப் பெற்றான்.[1]

இங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன், ‘மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர்[2], ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான். இங்கு ‘ஈழம் கொண்டது’ என்பது, ‘சீவல்லபனை ஏவி ஈழத்தரசன் வலிதொலைத்தது’ என்னும் பொருள் கொண்டதே ஆகும். இந்த இரண்டு போர்களும் நடைபெற்ற காலம் கி.பி.1169 முதல் 1177 வரை என்னலாம்.

அரசு : நெல்லூர், காளத்தி, நந்தலூர்[3], கங்கபாடி[4] முதலிய இடங்களிற் கிடைத்த சிற்றரசர் கல்வெட்டுகளில் இராசாதிராசன் பேரரசனாகக் குறிக்கப்படலாம், இராசாதிராசன் காலத்திற் சோழப்பெரு நாடு இராசராசன் காலத்தில் இருந்த நிலையிலே இருந்ததென்று கூறலாம்.


  1. 465 of 1905
  2. 36 of 1906, 731 of 1909, 474 of 1995, etc.
  3. Nellore Ins. edited by Butterworth and Venugopala Chetty, Nos. 105, 108 of 1922; 571 of 1907
  4. 48 of 1893
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/303&oldid=1234268" இலிருந்து மீள்விக்கப்பட்டது