பக்கம்:சோழர் வரலாறு.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

309



இது, இவனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் (திருவக்கரையில்) இவை குறிக்கப்பட்டிருந்ததால் என்க. இச்செயல்களையே இவன்மீது பாடப்பெற்ற ‘குலோத்துங்கன் கோவை'யும் புகழ்ந்து பாராட்டியுள்ளது.

வேள் நாட்டுப் போர்: மேற் கூறப்பெற்ற போர்கட்குப் பிறகு வேள் நாட்டை ஆண்ட வீரகேரளன் என்பவன் குலோத்துங்கனைப் பகைத்துக் கொண்டான். அதனால் இருவர்க்கும் போர் நிகழ வேண்டியதாயிற்று. அப்போரில் வீரகேரளன் தன் கைவிரல்கள் தறிக்கப் பட்டுத் தோற்றான்; வேறு வழியின்றிச் சோழனிடமே அடைக்கலம் புகுந்தான். அடைந்தார்க்கு எளியனான அண்ணல் குலோத்துங்கன் அவனை வரவேற்றுத் தன்னுடன் இருந்து உண்ணுமாறு உபசரித்து, அவனது நாட்டை அவனுக்கே அளித்து மகிழ்ந்தான்.[1]

ஈழம் கொண்டது : இராசாதிராசன் காலம் முதலே சோழர் செல்வாக்கை ஒழிக்க முயன்று முடியாது தவித்த முதலாம் பராக்கிரமபாகு, குலோத்துங்கன் காலத்திலும் ஈழத்தரசனாக இருந்தான். இவன் முன் போலவே மதுரையிற் பூசல் விளைக்க முனைந்தான். இதனை உணர்ந்த குலோத்துங்கன் கி.பி. 1888 அல்லது 1889 இல் படை ஒன்றை ஈழத்திற்கு ஏவினான். அப்படை சென்று சிங்களரைப் புறங்காட்டி ஒடச் செய்து மீண்டது. இக்குலோத்துங்கன் ‘ஈழவேந்தன் முடிமீது தன் அடியினைச் சூடியவன்’ என்று திருமாணிக்குழி கல்வெட்டுக்[2] கூறலால், ஈழத்தரசன் இவனைப் பேரரசனாக ஒப்புக்கொண்டு அடங்கி விட்டான் என்று கோடல் தகும்.

கருவூர் கொண்டது : கருவூர் சேர நாட்டின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது; கொங்கு மண்டலத்தின்


  1. V.R.R. Dikshitar's ‘Kulothunga Chola III, p.45
  2. S.I.I. Vol.7, No.797 (170 of 1902)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/311&oldid=493383" இலிருந்து மீள்விக்கப்பட்டது