பக்கம்:சோழர் வரலாறு.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

சோழர் வரலாறு



கோநகரமாகவும் இருந்தது. இதனைத் தலைநகராகக் கொண்டுசேரர் மரபினர் சோழர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். அவருள், குலோத்துங்கன் காலத்தில் அரசனாக இருந்தவன் தன் மனம் போனவாறு சோழனை மதியாது நாட்டை ஆண்டு வந்தான். அதனால், குலோத்துங்கன் அவனை அடக்கப் படையெடுத்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது; சேரன் படுதோல்வி அடைந்தான். போரில் தோற்ற சேரன் குலோத்துங்கனைச் சரணடைந்தான். இதனால், கருவூர் சோழன் கைப்பட்டது. இவன் அந்நகருள் நுழைந்து ‘சோழ கேரளன்’ என்று மன்னர் தொழ வெற்றிமுடி சூடி விளங்கினான். அன்றுமுதல் குலோத்துங்கன் ‘சோழகேரளன்’ எனப்பட்டான்; கொங்குமண்டலம் ‘சோழ கேரள மண்டலம்’[1] எனப்பட்டது.ஆயினும், பெருந்தன்மை பெற்ற குலோத்துங்கன், தன்னைச் சரண்புக்க சேரனுக்கே நாடாளும் உரிமை அளித்து மீண்டான். அதுமுதல் சேரன் பேரரசற்கு அடங்கித் தன் நாட்டை அமைதியுற ஆண்டுவந்தான். இங்ஙனம் அவனுக்குக் கருவூரில் முடிவழங்கினமையின், அந்நகரம் ‘முடிவழங்கு சோழபுரம்’ எனப் பெயர் பெற்றது.[2] இக் கொங்குப் போர் இவனது 16-ஆம் ஆண்டிலிருந்து புறப்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படலால், இப்போர் ஏறத்தாழக் கி.பி.1194-இல் நடந்ததாதல் வேண்டும் எனக் கொள்ளலாம்.

கச்சி கொண்டது : ‘கருவூரும் கச்சியும் கொண்டருளிய’ என்பது இவனது கல்வெட்டுகளிற் பயின்று வரலால், கருவூர் வெற்றிக்குப் பிறகு அடுத்து நடந்த செயல் கச்சி கொண்டதாகும் எனக் கோடல் தவறாகாது. இச்செயலைப் பற்றிய விவரம் உணரக்கூடவில்லை. ‘மகாராசப்பாடி ஏழாயிரம்’ ஆண்ட தெலுங்கு சோடனான ‘நல்லசித்தன் தேவன்’ என்பவன் கச்சியிலிருந்து தான் திறைபெற்று


  1. M.E.R. 75 of 1925; 126, 127, of 1900.
  2. S.I.I. Vol.3, No.23. 3. 483 of 1906.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/312&oldid=1234288" இலிருந்து மீள்விக்கப்பட்டது