பக்கம்:சோழர் வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

சோழர் வரலாறு



எதுரூர் முதலிய மைசூர்ப் பகுதிகளிலும் கொங்கு மண்டலத்திலும் இருக்கின்றன. ஆதலின் வடக்கே கடப்பை முதல் தெற்கே கன்னி முனை வரையும், மேற்கே மைசூர் முதல் கீழ்க்கடல் வரையும் இவனது ஆட்சி பரவி இருந்ததென்பதை அறியலாம்.[1]

இவனது ஆட்சிக்குட்பட்ட மண்டலங்களுட் சிறந்தது சோழ மண்டலமே ஆகும். அது 9 வள நாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ மண்டலம் ‘பெரியநாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது[2].

கோ நகரங்கள் : விசயாலயன் வழிவந்த சோழவேந்தர் காலங்களில் ஆயிரத்தளி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம்,இராசராசபுரம் என்பன அரசர் வசிப்பதற்கேற்ற கோ நகரங்களாக இருந்தன. ஆயிரத்தளி-நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர்களைக் கொண்டது. மூன்றாம் குலோத்துங்கன் இறுதிக் காலத்தில் அல்லது அவனுக்கு அடுத்துவந்த மூன்றாம் இராசராசன் காலத்தின் தொடக்கத்தில் சோணாட்டை வென்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன் இந்த ஆயிரத்தளி நகரை அழித்து வீர அபிஷேகமும் விசய அபிஷேகமும் (குலோத்துங்கன் மதுரையிற் செய்தாற் போல) செய்து கொண்டான் என்பதிலிருந்து, மூன்றாம் குலோத்துங்கன் கோநகரமாக இருந்தது ஆயிரத்தளியே ஆகும் என்பது தெரிகிறது. இப்பிற்காலச் சோழர் காலத்திற் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினமாகும்.

அரசியல் : மூன்றாம் குலோத்துங்கனது நீண்ட அரசாட்சியில் நேர்மை மிக்கிருந்தது. அரசியல் அலுவலா ளராகப் பலர் இருந்தனர். அவருள் களப்பாளராயர், தொண்டைமான், நுளம்பாதிராசர், விழுப்பரையர்,


  1. K.A.N. Sastry’s ‘Cholas II, p. 155.
  2. M.E.R. 521 of 1912
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/316&oldid=493388" இலிருந்து மீள்விக்கப்பட்டது