பக்கம்:சோழர் வரலாறு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

319


 கோவிலைப் பொன் வேய்ந்தமையால் ‘பொன் பரப்பினான்’ எனப் பெயர் பெற்றான். இவன் பாண்டிய தாட்டுப் போரில் ஈடுபட்டுச் சோழன் ஏவற்படி, பாணன் ஒருவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாக்கினன் என்ற செய்தி ஒரு பழம் பாடலால் தெரிகிறது[1]. இச் செயல் சோழன் செய்ததாக அவனது கல்வெட்டுக் குறிக்கிறது. எனவே, இச்செய்தி ஒரளவு உண்மை என்பது தெரிகிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுகள் இவன் மதுரையை வென்ற செய்தியையே மிகுதியாகக் குறிக்கின்றன.

அதியமான்கள் : இம்மரபினர் சங்க காலம் முதலே சிறப்புடன் இருந்தவர். இவர்கள் தகடுரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தவர். ‘இவர்கள், அதியேந்திரர், தகடாதிராயர்’ என்ற பட்டங்களை உடையவர். குலோத்துங்கன் காலத்தில் தகடுரை ஆண்ட அதியமான்கள் ‘அதியமான் இராசராச தேவன்’ ஒருவன். இவன் தகடூர் நாட்டில் பெண்ணையாற்று வட கரையில் உள்ள மலையனூர் என்பதைத் திருவண்ணாமலைக் கோவிலுக்குத் தேவதானமாக விட்டவன்[2]. அவன் மகன் ‘விடுகாது அழகிய பெருமான்' ஒருவன்; குலோத்துங்க சோழத் தகடாதிராயன்' ஒருவன்; 'சாமந்தன் அதியமான்' ஒருவன். இவருள் விடுகாதழகிய பெருமான் என்பவன் தன்னை ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ என்ற சங்ககால அரசன் மரபினன் என்று கல்வெட்டுகளில் குறித்துளன். இவன் மலையான் ஆகிய முன்சொன்ன ‘கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ என்பவனுடனும் செங்கேணிக் குடியினனான அத்திமல்லன் என்பவனுடனும் ஓர் உடன் படிக்கை[3] செய்து கொண்டான். அதனில், பேரரசனுடன் ஒத்துழைப்பதே வற்புறுத்தப்பட்டுள்ளது. இதனால், இம்மூவரும் குலோத்துங்கனிடம் உள்ளன்பு உடையவராக இருந்தனர் என்பது தெரிகிறது. இவன் தன் முன்னோருள்


  1. பெருந்தொகை, செ. 1188
  2. 626 of 1902.
  3. S.H.I. Vol. 7, No.119
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/321&oldid=1234337" இலிருந்து மீள்விக்கப்பட்டது