பக்கம்:சோழர் வரலாறு.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

321



பங்களநாடு ஆண்டவன். இவன் திருவண்ணாமலைக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளான்[1], உத்தம சோழ கங்கன் என்ற செல்வகங்கன் மற்றொருவன். இவன் மனைவி வட ஆர்க்காடு கோட்டத்தில் அகத்தியமலையில் திருநாவுக்கரசதேவர் படிமம் செய்துவைத்தாள்[2].

தெலுங்குச் சோடர்: இவர்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகியவற்றின் வட பகுதியையும் சித்துர், நெல்லூர், கடப்பை முதலிய கோட்டங்களையும் சிறு நாடுகளாகப் பகுத்து ஆண்டவர். இவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர்; பொத்தப்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர் ‘பொத்தப்பிச் சோடர்’ எனப் பட்டனர். தெல்லுரைத் தலைநகராகக் கொண்டு ‘சோடா சித்தரசர்’ என்பார் ஆண்டுவந்தனர். இம் மரபினர் அனைவரும் காளத்தி முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் மிகப்பலவாக விடுத்துள்ளனர். இவருள் குலோத்துங்கன் காலத்தவர் - மதுராந்தக பொத்தப்பிச் சோழன், நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்பவராவர்[3].

இதுகாறும் கூறப்பெற்றவர் குறிப்பிடத்தக்க பெரிய சிற்றரசர் ஆவர். இவர்கள் சிற்றரசராகவும், அமைச்சர், படைத் தலைவர், நாடு பார்ப்போர், நாடு காப்போர், இறை பெறுவோர் என்ற பலதிற உயர் அலுவலாளராகவும் இருந்தவர் ஆவர். இவர் ஒவ்வொருவரிடமும் தனித்தனிப் படைஉண்டு. அப்படை பேரரசன் வேண்டும் போது உறுதுணை செய்ய விடப்படும். இச்சிற்றரசர் அன்றிப் பல்வேறு சிற்றுார்களையும் பேரூர்களையும் ஆண்டவர் பலராவர்; அவர்கள் பல அறப்பணிகள் செய்துள்ள மையால் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர்.


  1. 546, 558 of 1902
  2. 559 of 1906
  3. K.A.N. Sastry's Chołas's. Voi, 2, pp. 134-140
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/323&oldid=493408" இலிருந்து மீள்விக்கப்பட்டது