பக்கம்:சோழர் வரலாறு.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

சோழர் வரலாறு



ஆனால் இச் சோழனோ தியாக விநோதன் எனக் கூறப் பெற்றான். இவ்வரிய முற்சோழர்க்கு இல்லாத இவனுக்கே சிறப்பாக அமைந்த பெயரைத் தானே கம்பர் பெருமான், “சென்னிநாட் டெரியல் வீரன் தியாகமா விநோதன்” என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்! அப்பெரும் புலவர் இவனை ‘அமலன்’ என்றும் குறித்துள்ளார். ‘அகளங்கன்’ என்றாற் போல ‘அமலன்’ என்பதும் ‘குற்றமற்றவன் என்னும் பொருளையே தரும்.

அரச குடும்பம் : இவனது பட்டத்தரசியின் இயற்பெயர் தெரியவில்லை. இவள் ‘புவனமுழுதுடையாள்’ எனப்பட்டாள். இவள், சோழ முடிமன்னர் மரபுப்படி நாளோலக்கத்தில் அரசனுடன் அரியனைமீது அமரும் பேறு பெற்றவள். மற்றொரு மனைவி ‘இளைய நம்பிராட்டியார்’ என்பவள். இஃது இவள் பெயரன்று. அரசன் தன் கல்வெட்டில் ‘நம் பிராட்டியாரில் இளைய நம்பிராட்டியார்’ என்பதால், இவனுக்கு மனைவியர் இருவரே இருந்தனர் என்பது தெரிகிறது. பிள்ளைகள் இருந்தனர் என்பது தெரியவில்லை. அரச குடும்பத்தில் இருந்த முதியவள் அம்மங்கா தேவி என்பவள். இவள் ‘சுங்கம் தவிர்த்த பூரீ குலோத்துங்கசோழ தேவரின் திருமகளார் பெரிய நாச்சியாரான அம்மங்கை ஆழ்வார்[1]’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவள். இவள் பெயர் குலோத்துங்கனது 5-ஆம் ஆட்சியாண்டில் காணப் படுகிறது. அப்பொழுது இவளுக்கு ஏறத்தாழ 80 வயது இருக்கலாம் என்று கோடல் பொருத்தமாகும். இவள் தன் வாணாளில் முதற் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆக அறுவர் அரசாண்ட பெருங்காட்சியை விழியாரக் காணும் பேறு பெற்ற பெருமகள் ஆவள்.


  1. S.I.I. Vol 4, No.226.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/332&oldid=493941" இலிருந்து மீள்விக்கப்பட்டது