பக்கம்:சோழர் வரலாறு.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

சோழர் வரலாறு


“புவிபுகழ் சென்னிபோர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனையெனக் கனக ராசியும்
சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும்
அவிரிழைக் குப்பையும் அளவிலாதது.!”


7. மூன்றாம் இராசராசன்
(கி.பி. 1216-1246)

கல்வெட்டுகள் : மூன்றாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு என்ன உறவினன் என்பது தெரியவில்லை. இளவரசன் அல்லது பின்வந்த முடியரசன் தனக்கு முற்பட்ட அரசனைக்கூறிவந்த முறைப்படியே ‘பெரியதேவர்’ என்று இவனும் குலோத்துங்கனைக் குறித்துள்ளான். இதைக் கொண்டு முறை வைப்பை உணரக் கூடவில்லை. இவன் பட்டம் பெற்ற பின்னும் குலோத்துங்கன் உயிருடன் இருந்தான். அதனால் அவன் பெயரிலும் கல்வெட்டுகள் வெளியாயின. இந்த மூன்றாம் இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னு இருநான்கு திசை’ என்னும் தொடக்கத்தையும், ‘சீர்மன்னு மலர்மகள்’ என்னும் முதலையும் உடையன. இவற்றுள் வரலாற்றுக் குறிப்புகள் காண்டல் அருமை, அரசன் உயர் குணங்கள் முதலியன இயற்கைக்கு மாறாகப் புலமை முறையிற் கூறப்பட்டுள்ளன. எனினும் இவனுடைய பிற கல்வெட்டுகளும் சிற்றரசர் கல்வெட்டுகளும் ஹொய்சள்ர் - பாண்டிய கல்வெட்டுகளும் சில நூல் குறிப்புக்களும் கொண்டு இவன் வரலாற்றை ஒருவாறு உணர்தல் கூடும்.

நாட்டு நிலைமை : இவன் கி.பி. 1216-இல் அரசன் ஆனான். அன்று முதலே இவன் அரசியலில் துன்பம் தொடர்ந்தது. தெற்கே பாண்டியர் பெருவலி படைத்தவராய்த் தம்மாட்சி நிறுவவும் சோழர்மீது பழிக்குப்பழி வாங்கவும் சமயம் பார்த்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/334&oldid=493123" இலிருந்து மீள்விக்கப்பட்டது