பக்கம்:சோழர் வரலாறு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

333



இருந்தனர். மேற்கே ஹொய்சளர் பேரரசைத் தாபித்துக் கொண்டு இருந்தனர்; இக்காலத்தில் ஹொய்சள இரண்டாம் வல்லாளன் ஆண்டு வந்தான். வடக்கே தெலுங்குச் சோடர் சோழப் பேரரசின் வடபகுதியைத் தமதாக்கிக் கொண்டும் சமயம்வரின் சுயேச்சை பெறவும் காத்திருந்தனர். அவர்க்கு வடக்கே காகதீய மரபினர் வலுப்பெற்றிருந்தனர். மேலைச் சாளுக்கியர் இருந்த இடத்தில் ‘சேவுணர்’ என்ற புதிய மரபினர் வன்மை பெற்றவராக இருந்தனர். சோழ நாட்டிற்குள் நடுநாட்டை ஆண்டுவந்த கூடலூர்க் காடவராயர் மறைமுகமாகத் தம் படைவலியைப் பெருக்கிக் கொண்டு சோனாட்டையே விழுங்கித் தமது பழைய பல்லவப் பேரரசை நிலைநாட்டக் காலம் பார்த்து வந்தனர். அவருட் கூடலூர், சேந்தமங்கலங்களை ஆண்டுவந்த கோப் பெருஞ் சிங்கன் தலைமை பெற்றவன் ஆவன்.

பாண்டியன் முதற் படையெடுப்பு : பாண்டிய நாட்டைக் குலோத்துங்கன் உதவியால் ஆண்டுவந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1215-இல் இறந்தான். உடனே அவன் தம்பியான மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரசன் ஆனான். இவன் கி.பி. 1216 முதல் கி.பி.1238 முடிய அரசாண்டான். இவன் பட்டம் பெற்றவுடன் சோழரைப் பழிக்குப் பழி வாங்கத் துணிந்தான், சோழன் செய்த அனைத்தையும் அவனது பெரு நாட்டிற் செய்து பழி தீர்த்துக் கொள்ள விழைந்தான்; தன் நாட்டில் கொடுமை பல செய்த குலோத்துங்கன் உயிரோடு இருக்கும் பொழுதே பழி தீர்க்க விரும்பினான். அதனால் அவ்வீர அரசன் பாண்டிய நாட்டிற்கே சிறப்பாக அமைந்த ஏழகப் படைகளையும் மறப்படைகளையும் கொண்டு சோழப் பெருநாட்டின் மீது படையெடுத்தான். அப்பொழுது மூன்றாம் குலோத்துங்கன் முதுமைப் பருவத்தினால் அரசியலிலிருந்து விலகி மூன்றாம் இராசராசன் அரசனாக இருந்த தொடக்க காலம் ஆகும். மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/335&oldid=493362" இலிருந்து மீள்விக்கப்பட்டது