பக்கம்:சோழர் வரலாறு.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

சோழர் வரலாறு



இராசராசன் ஆண்மை இல்லாதவன்; அரசர்க்குரிய உயர் பண்புகள் அறவே அற்றவன்; அரசியல் சூழ்ச்சி அறியாதவன். ‘அரசன் எவ்வழி, அவ்வழிக் குடிகள்’ ஆதலின், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அதே படை வீரர் இருந்தும் இல்லாதவர் போல் மடிந்து இருந்துவந்தனர். அதனால், சோணாடு எளிதிற் படையெடுப்புக்கு இலக்காயது.

படையெடுத்த சுந்தர பாண்டியன் சோழ நாட்டை எளிதில் வென்றான்; உறையூரும் தஞ்சையும் நெருப்புக்கு இரை ஆயின. பல மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடரங்குகளும் மண்டபங்களும் அழிக்கப்பட்டன. சோழ அரசன் எங்கோ ஒடி ஒளித்தான். சோணாட்டுப் பெண்களும் பிள்ளைகளும் தவித்தனர். பாண்டியன் இடித்த இடங்களில் கழுதை ஏர் பூட்டி உழுது வெண்கடுகு விதைத்தான்: பைம்பொன் முடி பறித்துப் பாணர்க்குக் கொடுத்தான், ஆடகப்புரிசை ஆயிரத்தளியை அடைந்து சோழவளவன் அபிடேக மண்டபத்து வீராபிடேகம் செய்து கொண்டான், பின்னர்த் தில்லை நகரை அடைந்து பொன்னம்பலப் பெருமானைக் கண் களிப்பக் கண்டு மகிழ்ந்தான்; பின்னர்ப் பொன் அமராவதி சென்று தங்கி இருந்தான்.

அப்பொழுது, ஒடி ஒளிந்த இராசராசன் தன் மனைவி மக்களோடு அங்குச் சென்று தன் நாட்டை அளிக்குமாறு குறையிரந்து நின்றான். பாண்டியன் அருள் கூர்ந்து அங்ஙனம் சோணாட்டை அளித்து மகிழ்ந்தனன். இக்காரணம் பற்றியே இவன் ‘சோணாடு வழங்கி அருளிய சுந்தர பாண்டியன்’ எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுளன்.

இப்பாண்டியன் படையெடுப்பைப் பற்றி இராச ராசன் கல்வெட்டுகளில் குறிப்பில்லை. ஆனால் பாண்டியன் மெய்ப்புகழ் இதனைச் சிறந்த தமிழ் நடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/336&oldid=493363" இலிருந்து மீள்விக்கப்பட்டது