பக்கம்:சோழர் வரலாறு.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

343



மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த பரப்பு இவன் காலத்தில் இல்லை என்பது விளங்குகிறது.

சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சிக் காலத்துச் சிற்றரச மரபினர் வழிவந்தவரே இராசராசன் காலத்தில் சிற்றரசராக இருந்தனர். இவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். அவருள் முதல்வன் கோப்பெருஞ்சிங்கன். இவன் முதலில் திரு நீடுரைச் சுற்றியுள்ள நாட்டுக்குத் தலைவனாக இருந்தான்; பிறகு சேந்தமங்கலம், கூடலூர், விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களைத் தன் அகத்தே கொண்ட நாட்டை ஆண்டுவரலானான். இவன் பழைய பல்லவர் மரபினன், வீரம் மிக்கவன்; சிறந்தபோர்வீரன், அரசியல் தந்திரி, பேரரசனையே சிறைப்பிடித்த செம்மல். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் பலவாகும். இவன் ஹொய்சளர், காகதியர் முதலிய பலருடனும் போர் இட்டவன், சோழப் பேரரசிற்கு அடங்கியதாகக் கல்வெட்டுகளிற் காட்டிக் கொண்டு தன்னாட்சி நடத்தி வந்தவன். இவன் கி.பி. 1243 முதல் தன் ஆட்சி ஆண்டைக் கணக்கிட்டு வந்தவன்; அது முதல் கி.பி. 1279 வரை(36 ஆண்டுகள்) தன்னாட்சி பெற்றுப் பெருநாட்டை ஆண்டவன், தெற்கே சடாவர்மன் சுந்தர பாண்டியனுடன் போரிட்டவன். இப்பெரு வீரன் வடக்கே திராக்ஷராமம் முதல் தெற்கே தஞ்சாவூர் வரை கோவில் திருப்பணிகள் பல செய்தவன். இவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். இவன் தென்னாட்டுப் பெருவீரருள் ஒருவனாக மதிப்பிடத் தக்கவன் ஆவன்[குறிப்பு 1].

சித்தூர், நெல்லூர், கடப்பை இவற்றை ஆண்ட தெலுங்கச் சோடர் அடுத்துக் குறிப்பிடத் தக்கவர் ஆவர். சாளுக்கிய நாராயணன் என்ற மதும சித்தரசன் ஒருவன். மதுராந்தக பொத்தப்பிச் சோழ எர்ர சித்தரசன் ஒருவன். இவர்கள் காஞ்சி நகரத்துக் கோவில்களில் பல பணிகள்


  1. இவனது வரலாறு விரைவில் வெளியிடப்படும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/345&oldid=1234306" இலிருந்து மீள்விக்கப்பட்டது