பக்கம்:சோழர் வரலாறு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சோழர் வரலாறு



3. காந்தன்

வரலாறு

இவன் காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன்.இவன் அகத்தியரிடம் பேரன்புடையவன்; அவர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. இவன் பரசுராமன் காலத்தவனாம்; அவன் தெற்கே வருதலைக் கேட்டு (அவன் அரச மரபினரைக் கொல்லும் விரதம் உடையவனாதலின்) அஞ்சி அகத்தியர் சொற்படி, தனக்குப் பரத்தைவழிப் பிறந்த காந்தன் என்பானைச் சோழ அரசனாக்கி, எங்கோ மறைந்திருந்தானாம், பரசு ராமனைப் பற்றிய அச்சம் நீங்கியவுடன் மீண்டு வந்து தன் நாட்டைத் தானே ஆண்டானாம்.[1]

காவிரி வரலாறு

காவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது என்னும் கதை மணிமேகலை காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் வந்தமை வியப்பன்றோ? காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனக் கோடல் பொருத்தமாகும். இதனையே,

     “மேற்குயரக்,
     கொள்ளும் கிடக் குவடு டறுத்திழயத்
     தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்”

என வரும் விக்கிரம சோழன் உலா அடிகள் உணர்த்துகின்றனவோ? பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்று,


  1. மணிமேகலை, காதை 22
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/38&oldid=493425" இலிருந்து மீள்விக்கப்பட்டது