பக்கம்:சோழர் வரலாறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

65



கழகங்களையும்[1] அமைத்த அறிஞன் ஆவான். இப்பெருந் தகையாளன் புலவர்களை நன்கு வரவேற்று வேண்டிய நல்கித் தனக்கு அவர் மாட்டுள்ள ஆர்வமிகுதியால், அவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் கடப்பாடு உடையவனாக இருந்தான்.[2] வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட பெருநாட்டைத் தன் ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் சோழன், புலவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் பழக்கம் உடையவனாக இருந்தான் எனின், இப்பெருமகனது பெருந்தன்மை யையும் தமிழ்ப்புலவர் மாட்டு இவன் வைத்திருந்த பெருமதிப்பையும், சிறப்பாகத் தன் தாய்மொழி வளர்ச்சியில் இவனுக்கிருந்த தனிப்பற்றையும் என்னெனப் புகழ்வது! இத்தகைய தமிழ்ப் பேரரசர் அரும்பாடு பட்டு வளர்த்த சங்கத் தமிழாற்றான் - நாம் இன்று ‘தமிழர்’ எனத் தருக்குடன் நிற்கின்றோம் என்னல் மிகையாமோ?

கலைகள் : கரிகாலன் காலம் செழித்த காலமாதலின் பல கலைகளும் ஓங்கி வளர்ச்சியுற்றன என்பதில் ஐயமில்லை. இசை, நாடகம் முதலியன வளர்ந்தோங்கின என்பது பொதுவாகச் சங்க நூல்களைக் காணும்போது நன்கறியலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாதவி நடித்தபோது இருந்த பல்வகை ஆசிரியர், கருவிகள், நடிப்பு முறைகள் இன்னபிறவும் கரிகாலன் காலத்தில் நன்னிலையில் இருந்தன என்பதில் ஐயமுண்டோ? இதன் விரிவெல்லாம் அடுத்த பகுதியிற் காண்க.

சமயம்: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல்


  1. பட்டினப்பாலை; வரி. 169-171.
  2. பொருநர் ஆற்றுப் படை வரி. 76-129; 151;173.


சோ. வ. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/67&oldid=480645" இலிருந்து மீள்விக்கப்பட்டது