பக்கம்:சோழர் வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சோழர் வரலாறு



என்றனர். அதுகேட்ட அரசன் நகைத்து, “நிறைந்த அறிவினை உடையீர், என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் நான் செல்வம் உடைய காலத்து வராதிருப்பினும் வறுமையுற்ற இக்காலத்து வந்தேதீருவன். அவன் இனிய குணங்களை உடையவன் தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, ‘என் பெயர் பேதைமையுடைய சோழன்’ என்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமை உடையவன். அவன் மெய்யாக வருவன்; அவனுக்கும் இடம் ஒழியுங்கள்”[1] என்றான்.

பொத்தியார் பாராட்டுரை: இங்ஙனம் அரசன் அறைந்த சிறிது பொழுதிற்குள் பிசிராந்தையார் அங்குத் தோன்றினார்; அரசனைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு உவகைக் கண்ணிர் பெருக்கினார். இந்த அற்புதத்தைக் கண்ட பொத்தியார் பெருவியப்பெய்தி, “தனக்குரிய சிறப்புகளை யெல்லாம் கைவிட்டு இங்ஙனம் அரசன் வடக்கிருத்தல் என்பது நினைக்கும்பொழுது வியப்பினை உடையதாகும்! வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது!”[2] என்று கூறி வியப்புற்று வருந்தினார்.

என்றும் இளமை: சோழனைச் சூழ இருந்த சான்றோர் பிசிராந்தையாரை நோக்கி, ‘உனக்கு யாண்டு பல ஆகியும்


  1. புறம், 216.
  2. புறம், 217.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/92&oldid=1234328" இலிருந்து மீள்விக்கப்பட்டது