பக்கம்:சோழர் வரலாறு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சோழர் வரலாறு


பார்ப்பார்க்குப் பிரம்மதேயங்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் என்பதும், அவர்கள் துணைகொண்டு இராயசூயம் செய்து புகழ்பெற்றவன் என்பதும் விளங்குகின்றன.

2. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி[குறிப்பு 1]

முன்னுரை: இவன் தித்தன் என்ற சோழனது மகன்; தந்தையுடன் வேறுபட்டு நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டிருந்தவன், முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றவன் இவனைப் பாடியவர் சாத்தந்தையார் (சாத்தன் தந்தையார்?)[1] பெருங்கோழி நாய்கன் மகள் தக்கண்ணையார்[2] என்போராவர்.

போர்: இவனது ஊரைக் கொள்ள ஆவூர் மல்லன் வந்தனன் போலும்! அவனுடன் இவன் விரைந்து போர் செய்தான். அப்போர் பொழுது போன பிறகு கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[3]

நக்கண்ணையார் காதல்: இவர் புலவர் பெண்மணி ஆவர்; பெருங்கோழி (உறையூர்?) நாய்கன் மகளாவர். இவர் கிள்ளிமீது காதல் கொண்டவர்போலப் பாராட்டும் பாக்கள் நயமுடையன;

“வீரக் கழலையும் மைபோன்ற மீசையையும் உடைய இளையோன் பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுகிறது. அவனைத் தழுவ உள்ளம் உந்துகிறது. ஆயின், யாய்க்கும் அவையோர்க்கும் அஞ்சுகிறேன்.[4] என்


  1. புறம், 80-82.
  2. புறம், 83-85.
  3. புறம், 82
  4. புறம், 83.
  1. ‘போரவை’ என்பதே ஏற்புடையதென்பர் - Vide R. Raghava Iyengar’s ‘Tamil Varalaru’ p.60.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/98&oldid=1234321" இலிருந்து மீள்விக்கப்பட்டது