பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைக்காற்று, தண்காற்று, ஆ!அரிய காற்று! ஆசைதீர்க்க முடியாத அரியமணக் காற்று! பலதிசையின் புன்னைமணம், தாழைமணங் கமழும் பாங்குமிழும் கடலுப்பும் சுமந்துவரும் காற்றே.

குழந்தைமையில் புயலாகிக் குமுறிநின்ற காற்று கொழுந்தணலாய் வெடித்தெறிந்து தணல் ஊதி ஏற்றுச் சுழல்அலையில் கடற்காக்கை உரத்தொலிக்கும் எங்கும், சுழற்றிறக்கை ஒலி,பயண ஆசைகளை எழுப்பும்.

முகில்கிழித்துக் காற்றுலவும் வானரங்கைச் சிறுவன் குருகினைப்போல் தன்கழுத்தை வளைத்தரிய வியப்பில் முகம்கொடுத்துக் காணுவதும் மகிழ்வில்முளைத் தாடி முந்துவதும் இன்றுஎளிய காட்சிஎனல் ஆகும்.

விரைவில்தன் கட்டிருந்து வெளியில்வந் திடுவான், மிதித்தறியாப் பாதைகளில் வேட்கைஉந்தச் செல்வான், விரைபவனை எம்மனிதர் எவ்விதச்சூ ழலுமே மீண்டிடவே மறித்தவனைத் தடுக்கமுடி யாது.

சாரிமாத் தீவின்மேல் உயரிருந்து பார்த்தால் சட்டென்று வானகமே கடலாகத் தோன்றும். பாரித்த என்நெஞ்சால் அதையளந்து பார்ப்பேன், படுதிரைசூழ் தீவழகு முகமாகப் பொலியும்.

உயர்வான வெளியினிலே நான்பறந்த போதும் சாஅரிமா ஊன்றியஎன் வேர்க்கால்கள் அறுமா? இயற்கையாய் என்றும்அவை பிணைத்திருக்கும் என்னை இங்கவைதாம் நிலையான மிகஆழத் துள்ளே!

224