பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 7

இதுவரை இது எல்லாம் காலை யோசனை!

பெருமூச்செறிந்து, கட்டிலில் அமர்கிறேன். இப்போ தெல்லாம் வீட்டுள் மட்டுமே நடமாட்டம். மீண்டும் மீண்டும் யோசனைகள்தாம் என்னைப்பற்றியும் என்னைப் பாதித்தவைபற்றியும். நடமாட்டம் இருந்தபோது மட்டு மென்ன? ஆழ்ந்து யோசிக்கையில் இது சுயநலத்தைச் சார்ந்ததல்ல. என்னிடம் வேறு விஷயம் இல்லை. நான் என்கையில் அதனுள் என் உலகமே அடங்கிவிட்டது. சமுதாயத்திற்காக பாடுபடுபவர்கள் ஆகட்டும், அவர்களின் செயல்களும், செய்கைகளும் இதே உலகில் அடங்கியதுதான் அவரவர்க்கு அவரவர் உலகம்.

ஜனனம், மரணம் இடையில் ஒரு முழமோ இல்லை சானோ இல்லை எந்த அளவுள் அடங்கியதோ வாழ்க்கை. இவை மூன்றும் சேர்ந்ததுதானே உலகம். இப்போது தோன்று கிறது. இதிலிருந்து எனக்கு விமோசனமே இல்லையா? விமோசனம் என்பதே என்ன?

இன்று வானம் மப்பிட்டிருக்கிறது. மேகங்கள் திரண்டு ஒன்றுடன் ஒன்று குமைந்து நேரம் இருள்கிறது. மழை வேண்டும். வானமே. பொய்க்காதே.

மனம் சஞ்சலிக்கிறது. அம்மா, அண்ணா, சிவா, அபிதா நீங்கள் எல்லாம் எங்கிருக்கிறீர்கள்? நீங்கள் எங்கும் போயிருக்க மாட்டீர்கள். இங்குதான் சுற்றிக்கொண்டிருக் கிறீர்கள். இல்லாவிடின் இத்தனை காலம் கழித்து இன்று வேளை பார்த்து இப்போது இது தோன்றுவானேன்? காலாந்த காலந்தமாய்த் திரும்பத்திரும்ப இதே எண்ணம், இதே ஜனனம், இதே மரணம், இதே வாழ்க்கை. இதுதானே நீங்கள்? இதுதானே நாம்? இதுதானே நான்?