பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 93

கொண்டன. அவைகளின் பார்வையில் நான் இதுவரை காணாதவை கண்டவையிலேயே புதிது புதியதாய் முளைத்துக் கொண்டன. அவைகளை எப்படி என் எழுத்தில் கொண்டு வருவது. இது என் புது சாஹசம் ஆயிற்று.

சில சமயங்களில் சாதித்தேன் என்றுகூட உள்ளுணர்வில் உணர்ந்தேன். ஆரபி, ஆபேரி, விஜயநாகரி எல்லாம் அபூர்வம்தான். இப்பவும் என் எழுத்தில் இசை யிருப்பதாக விமர்சகர்கள் நுட்பமாக த்வனியை உற்றுக் கேட்பவர் சொல்கிறார்கள். வேண்டுமென்று அதன்பின் ஒடவில்லை. பார்க்கப் போனால், எழுத்து, இசை, ஆன்மிகம், சிந்தனை இத்யாதி இணைந்த கலைகள்தானே! செளந்தர்ய! எங்கு அழகு இல்லை? அனுதாபம் கண்டாலே அந்த இடத்தில் அழகு ஏற்கெனவே இருந்ததுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஐயன்பேட்டை வாடாவூர் காஞ்சிபுரம் போகும் வழியில் பாழ்மண்டபம் எந்த நிமிடம் விழுந்துவிடுமோ என்று அத்தனை விரிசல், ஆனால் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறேனே என்று பெருமிதம் காட்டுகிறதே! அந்த ஆச்சர்யம்தான் அதன் அழகு. இந்த அழகினால் பயன் என்? எந்த அழகினால் பயன் என்? ஆனால் ஒன்று. எண்ணத்தை ஊக்குவித்து, அதனால் உயிரையே ஊக்குவிக்கும் உயிர்ப்பு சக்தி எதற்கு உண்டெனினும் அதுவேதான் இந்த ஜனன மரணமிடையே ஒரு சாண் வாழ்க்கை. அதற்குள் ஆயிரம் சிந்தனை, ஆயிரம் கேள்விகள் என வாழ்க்கை இன்றும் நீடிக்கச் செய்கிறதே அதுவே அழகும் அழகின் பயனும்தான். வேறென்ன சொல்வேன்? செய்வேன்?