பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

செளந்தர கோகிலம்



ஜில்ஜில்லென்று டால் வீசிய வைர ஆபரணங்களையே அணிந்து ஜெகஜ்ஜோதியாக இருந்ததைக் கண்டு அவன் பிரமித்து ஸ்தம்பித்து மதிமயங்கி அவளது அற்புத அழகில் தனது மனத்தையும், கண்களையும் லயிக்க விட்டு அப்படியே சிறிது நேரம் ஒய்ந்துவிட்டான். ஆனால் கோகிலாம்பாளும், செளந்தர வல்லியும் ஒரேவித வடிவத்தினராக இருந்தனர் என்பதை அதற்கு முந்திய நாளே அவன் கண்டவன் ஆதலால், அவள் தனது மனத்தைக் கொள்ளைகொண்ட கோகிலாம்பாளோ, அல்லது, அவளது தங்கையான செளந்தரவல்லியோ என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியாமையால், அவன் தேனில் வீழ்ந்த ஈயைப்போல ஆநந்த வெள்ளத்தில் வீழ்ந்து மிதந்து தத்தளித்துக் கனவு காண்பவன்போல நிலைகலங்கி நின்றான். தான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பது தவறென அவனது பகுத்தறிவு அவனைக் கண்டித்தது. ஆனாலும், அவனது சித்தமும் தேகமும் பிடிவாத மாக அவ்விடத்திலேயே நின்றுவிட்டன. கண்கள் ஒரே நிலையில் நின்று அவளது அழகை அள்ளி அள்ளிப் பருகுகின்றன. அவனது மனமும் பஞ்சேந்திரியங்களும் குளிர்ந்து பரவசமடைகின்றன. அந்த நிலைமையில் அவன் சிறிது நேரம் அப்படியே நிற்க, அந்தப் பொற்பாவை உலாவிய வண்ணம் சற்று தூரம் போய் விட்டுத் திரும்பியபோது தற்செயலாகக் கீழே நோக்கினாள். அப்போது மேலே பார்த்த வண்ணம் வியப்பே வடிவாக நின்று கொண்டிருந்த கண்ணபிரானைக் கண்ட அந்த யெளவன மடமான் மிகுந்த களிகொண்டவள்போல அவனை உற்று நோக்க, அவளது சுந்தரவதனம் அப்போதே தளையவிழ்த்து விரியும் தாமரை மலர்போல விகசித்துப் புன்னகை செய்து அவ்வாறே ஒரு நிமிஷமிருந்து அடுத்த நிமிஷத்தில் நாண மடைந்து கீழே கவிழ்ந்து கொண்டது. இன்னொரு நொடியில் அந்த அற்புத வடிவமே அப்பால் மறைந்து போய்விட்டது. ஆகாயத்தில் முளைத்தெழும் குளிர்ந்த பூரண சந்திரன் கரு மேகத்தில் மறைந்து காணாமற்போனால் எங்கும் இருள் நிறைவதுபோல கண்ணபிரானது மனதும், அவன் பார்த்த திசைகளும் இருள் சூழ்ந்து போய்விட்டன. அவளது வசீகர முகத்தில் புன்னகை தோன்றியது. கூர்மையான ஈட்டியொன்று அவனது ஹிருதய கமலத்தில் சுருக்கென்று பாய்வதுபோலவும்,