பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

செளந்தர கோகிலம்



மனவெழுச்சியும் உண்டாயின. அவள் ஒருகால் செளந்தரவல்லி யாக இருந்தால், அவள் தன்னைக் கண்டு புன்னகை செய்ததி லிருந்து, அவளும் தன்னிடத்தில் பிரியம் வைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது, ஆனாலும், அவனது மனம் அவளிடத்தில் அவ்வளவாகச் செல்லவில்லை என்பதை அவனே நன்றாக உணர்ந்தான். ஆகவே, அவன் கோடானுகோடி எண்ணங் களினால் வதைக்கப்பட்டவனாய், எவ்வித முடிவும் செய்ய மாட்டாதவனாய் மயங்கிக் கலங்கி அவ்விடத்திலேயே நின்று அவள் மறுபடியும் திரும்பி வந்து தனக்கு காட்சி கொடுப்பாளோ என்று சந்தேகித்து ஏங்கித் தாமரை இலை தண்ணிர் போலத் தத்தளித்து நின்றான். அவ்வாறு, கால்நாழிகை சென்றது. அரை நாழிகை, ஒரு நாழிகையும் கழிந்தது. அந்த மின்னாள் திரும்பி வராமலே போய்விட்டாள். பார்த்துப் பார்த்து அவனது விழிகள் பூத்துப் போயின. மேலே அண்ணாந்து பார்த்ததால் அவனது கழுத்தும் தோள்பட்டைகளும் நோக ஆரம்பித்தன. ஆகாரம் இல்லாமையால், தேகம் தளர்வடைந்து நிற்க மாட்டாமல் தவித்தது. கால்கள் தடுமாறின. கண்கள் இருண்டன. அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற சபலம் அவனை அவ் விடத்திலேயே இழுத்து வைத்தது. ஆனாலும், அவள் திரும்பி வரமாட்டாள் என்ற எண்ணமும், தான் கொண்ட விருப்பமும், எதிர்பார்த்த விஷயமும் பலியாவென்ற உறுதியும் வலுவாக உண்டாகிக் கொண்டிருந்தன. கடைசியாக, அவன் நிற்கமாட் டாமல் கீழே விழுந்து விடக்கூடிய கேவல நிலைமைக்கு வந்து விட்டமையால், அவன் தனது இச்சைக்கு மாறாக அவ்விடத்தை விட்டுப் போய் கட்டிடத்திற்குள் நுழைய நேர்ந்தது.

அப்போது மாலைவேளை வந்துவிட்டது. ஆகையால் எங்கும் மின்சார தீபங்கள் சப்த வர்ணங்களில் நவரத்தின மணிகள் போலக் குலை குலையாகத் தொங்கி, அந்த இடம் மாயமந்திரத்தால் நிருமாணிக்கப்பட்ட மோகினி தேவியின் சோபன மாளிகையோ எனத் தோன்றியது. ஆகையால், ஏழ் மையான இடத்திலிருந்து எளிய பொருட்களையே கண்டு பழகிய கண்ணபிரான் திடீரென்று அப்படிப்பட்ட கந்தருவ லோகத்தில் தான் கொண்டு வரப்பட்டிருந்ததையெண்ணி எண்ணித் தான் காண்பது கனவோ நினவோ என அடிக்கடி