பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 127 உடனே திவான், 'ஓகோ அப்படியானால் உங்கள் வேலை சுலபமானது தான்; உமக்கு மனைவி மக்கள் இருக்கிறார்களா? சொத்து ஏதாவது இருக்கிறதா?’ என்றார். - இன்ஸ்பெக்டர், "என் சம்சாரம் இறந்து போய்விட்டாள். குழந்தை குட்டிகள் முதலிய நச்சு எதுவுமில்லை. நான் சேர்ப்பாக ஒரு தட்டாரப் பெண்பிள்ளையை வைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அதிக சொத்து ஒன்றுமில்லை. பாங்கியில் 1000-ரூ. போட்டிருக்கிறேன். அவ்வளவுதான்' என்றார். அதைக்கேட்ட உடனே திவான் கனைத்துக்கொண்டு கம்பீரமாக நிமிர்ந்தார். அவரது முகக்களை உடனே மாறி, அதுவரையில் அவர் அந்த இன்ஸ்பெக்டருடன் கபடமாகப் பேசினார் என்பதை எளிதில் காட்டியது. அவ்வாறு நிமிர்ந்தவர் முன்னே பேசியதைவிடச் சிறிது உரத்த குரலில் பேசத்தொடங்கி, "ஐயா! இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டுக்கொண்டீர்களா? இனி நீங்களே மறைந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கேயே வந்துவிடலாம்” என்று தமக்கு வலது பக்கத்தில் இருந்த அறையை நோக்கிக் கூறினார். அடுத்த நிமிஷத்தில் அந்த அறையின் கதவு திறந்து கொண்டது. அந்த சமஸ்தானத்துப் போலீஸ் சூபரின்டென் டெண்டும், முதல் நாள் வீரம்மாளின் புருஷனைத் தண்டித்த நீதிபதியும், இன்னம் இரண்டு முக்கிய அதிகாரிகளும் தபதப வென்று திவானிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். திவான் அவர்களை அழைத்ததைக்கேட்டு, அவர்கள் வந்ததைக் கண்ட இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு அப்படியே ஸ்தம்பித்துப் போய் விட்டார். அவரது உயிரில் பெரும் பாகமும் எமனுலகத்திற்குப் போய்விட்டதென்றே கூறவேண்டும். கையும் களவுமாய்ப் பிடிபட்ட கள்வனைப் போல அவர் திருட்டு விழி விழிக்கிறார். அவரது கைகால்கள் வெடவெடவென்று ஆடுகின்றன. உடம்பு திடுக்கு திடுக்கென்று தூக்கிப்போடுகிறது. பெருத்த திகிலும், குழப்பமும் எழுந்து அவரது மனத்தைக் கப்பிக்கொள்ளத் தொடங்கின. தம்மை திவான் ஏமாற்றி விட்டாரென்றும், அன்றோடு தாம் தொலைந்து போய்விட்டோம் என்றும் அவர் உடனே நிச்சயித்துக்கொண்டு, மரண தண்டனை அடைந்தவன்