பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 செளந்தர கோகிலம்

சாமியார் இருவரும் விழுப்புரத்தில் இறங்கி அவ்விடத் திலிருந்து பிரிந்துபோகும் கிளை ரயிலில் ஏறி மறுநாட் காலையில் புதுச்சேரியை அடைந்தார்கள். அடைந்தவர்கள் தமது ஸ்நானம், நியம நிஷ்டைகள், சாப்பாடு முதலியவைகளை முடித்துக் கொண்டபின், தையலம்மை தெரிவித்த இடத்தை அடைந்து துரைக்கண்ணு முதலியார் என்ற வியாபாரியைப் பற்றித் தந்திரமாக விசாரிக்கலாயினர். தாங்கள் பரதேசிகளாதலால், தங்களை எவரும் மதித்து மறுமொழி கூறமாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து பலபேர்களிடம் நிரம்பவும் பணிவாகவும், அவர்கள் சந்தேகங்கொள்ளாத படியும் கேட்டு, துரைக்கண்ணு முதலியாரின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டனர். அந்த முதலியார் தமது பெண் ஒடிப்போனதனால் ஏற்பட்ட அவமானத் தையும் விசனத்தையும் தாங்கமாட்டாதவராய் மனமுடைந்து, அதுமுதல் வியாதியில் வீழ்ந்து இளைத்து மெலிந்து மகா கேவலமான நிலைமையில் இருந்ததாகவும், அவரது வர்த்தகத்தை அவர் கவனிக்க இயலாது போகவே, அது சீர்குலைந்து நஷ்டமாய் முடிந்து போனதாகவும், அவர் நிரம்பவும் எளிய நிலைமையில் வெகு சீக்கிரம் இறந்துபோகத் தக்கவராய் இருப்பதாகவும் அவர்கள் தெரிந்து கொண்டனர். அந்த மகா துக்ககரமான வரலாற்றைக் கேட்கவே, திவான் சாமியார் மிகுந்த மனக் கலக்கமும் வேதனையும் அடைந்து, ‘அடாடா இவர்கள் எத்தனை குடும்பத்தை அழித்து விட்டார்கள்! எங்களுடைய வாழ்வு சீர்குலைந்தது போலல்லவா, இந்த தணிகரின் வாழ்வு சீர்குலைந்து போய் விட்டது ஆகா! இவ்வளவு கேவலமான நிலைமையில் இருப்பவரிடம் நாம் எப்படிப் போய் நம்முடைய விஷயத்தை விசாரிப்பது” என்றார்.

உதவிச் சாமியார், “நம்மாலான வரையில் முயற்சி செய்து பார்க்கலாம். கடவுள் துணை செய்வாரென்ற நம்பிக்கை என் மனசில் பூர்த்தியாக இருக்கிறது” என்றார்.

திவான் சாமியார், “சரி, போய் பார்க்கலாம்” என்றார்.

உதவிச் சாமியார், ‘அதிருக்கட்டும், தாங்கள் எல்லா ஊர் களுக்கும் விளம்பரம் அனுப்பினர்களே. புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் ஆளுகைக்கு உள்பட்டதாயிற்றே. இந்த ஊருக்குத் தாங்கள் விளம்பரம் அனுப்பியதாக நினைவிருக்கிறதா?” என்றார்.