பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செளந்தர கோகிலம்

நமஸ்காரம் செய்து, “என் குல விளக்கை ஏற்றிவைத்த என் உயிர்த் தெய்வத்தை இந்த ஜென்மத்தில் காணப்போகிறேனா என்று முற்றிலும் நம்பிக்கையற்று ஏங்கிக் கிடந்த என்னை மறுபடி உய்விக்க வந்த என் அன்னதாதாவே! நானும் என் சம்சாரமும் தங்களை நினைக்காத நிமிஷம் உண்டா இனி நானும் என் குடும்பத்தாரும் சாப்பிடப் போகும் சாப்பாடு தங்களால் கொடுக்கப்பட்ட பிச்சையாதலால் நாங்கள் ஒவ்வொரு வேளையிலும் சாப்பிட முதல் கவளம் எடுக்கும்போது, ‘எங்களுக்கு அன்னமளித்த வள்ளல் நீடுழி வாழவேண்டு மென்று சொல்லிவிட்டே சாப்பிடுவோம்,’ என்று அன்றைய தினம் இரவில் நான் தங்களை விட்டுப் பிரிந்த காலத்தில் சொன்ன சொல்லை இன்றைக்கும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறோம். என் அண்ணலே! என் ஆண்டவனே கலிகாலத்துப் பேசுந் தெய்வமே தங்களுக்கும் இப்பேர்ப்பட்ட கோலம் ஏற்பட்டதா? தங்களையும் ஈசன் சோதிக்க நினைத்தானா ஆ என்னப்பனே! பெருந்தகைக் குன்றமே! அருங்குனப் பெரியீர்! தங்களை ஈசன் சோதனைக்கு ஆளாக்குகிறானென்பது பிரத்தியகடி மாகத் தெரிகிறது! இதுவரையில் ஈசன் தங்களை வேறு பலவகையில் சோதனைக்கு ஆளாக்கியது போதாதென்று இப்போது என் மூலமாகவும் சோதனை செய்துவிட்டானே! நானும், என் சம்சாரமும் தங்கள் விஷயத்தில் எப்பேர்ப்பட்ட மகா கொடிய பாதகம் செய்துவிட்டோம். எங்கள் குலதெய்வமாக மதித்துத் தங்களை வணங்கக் கடமைப்பட்டவர்களான நாங்கள் நிரபராதி யான தங்கள் பேரில் திருட்டுக் குற்றம் சுமத்தி என்றைக்கும் மீளாத ரெளரவாதி நரகத்திற்குப் போக வழி தேடிக் கொண் டோமே!” என்று தேம்பித் தேம்பி அழுதவண்ணம் பிரலாபித்துக் கூறி தமது மனைவியை நோக்கி, “ஏ அம்மாக்கண்ணு! நீ எப்பேர்ப்பட்ட பஞ்சமா பாதகம் செய்துவிட்டாய் தெரியுமா! நான் தினந்தினம் எந்த மகானைப்பற்றி உன்னிடம் வாய் ஓயாமல் ஸ்தோத்திரம் செய்து பிரஸ்தாபித்துக் கொண்டிருப் பேனோ, அந்தப் புண்ணிய புருஷரல்லவா இவர்கள்! வா இப்படி வந்து இவர்களுடைய காலில் விழுந்து, நீ அறியாமல் செய்த பெரும் பிழையை மன்னித்தருளும்படி வேண்டிக் கொள்” என்று நிரம்பவும் தழுதழுத்து உருகிய குரலில் கூற,