பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 & லா. ச. ராமாமிருதம் சந்துருவுக்கு மயிர் நரைத்ததிலிருந்து ஜானா மற்றெல்லார் மயிரையும் கவனிப்பாள். அதுவே ஒரு கெட்ட பழக்கமாய்விடும் போலிருந்தது. ராமதுரைக்கு ஒரே சுருட்டை சீவினால் வங்கி வங்கியாய் அடுக்கும். ஆனால் பாதிப் பொழுது வாரவும் மாட்டான். முழுக் கறுப்பு இல்லை; சிறு செம்பட்டை பூத்த மோதிரக் குவியல். ஜானாவுக்கு மயிர் வெகு முரடு அடர்த்தி. அதுவும் தனக்கு இந்தக் கதி நேர்ந்தபின் பின்னுவதையே விட்டு விட்டாள். மயிரின் முடிச்சு ஒரு சிறு இளநீர் பருமனுக்குக் கழுத்தில் கனத்துக்கொண்டிருக்கும். ஆனால் நரைமயிர்கூடக் கிடையாது. “-உங்களை சாஸ்திரிகள் கூப்பிடறார்.” அவளுடைய மன்னி நாதாங்கியைப் பிடித்துக்கொண்டு வாசற்படிக்கு வெளியே நின்றாள். சிந்தனையின் அரைப் போதையில் ஜானா கெளரியைப் பார்த்தாள். அவளுக்குக் கூந்தல் குட்டை. ஆனால் நடு வகிட்டிலிருந்து சீவப்பெற்று, ஒரு மயிர்கூடப் பிரியாது பின்னுக்குப் போகையில் அதன் ஒழுங்கும், பளபளப்பும், முன்னடர்த்தியும் பறவையின் ஒடுங்கிய சிறகுகளை நினைவு மூட்டின. “நாழியாயிடுத்தாம்-” சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான். கூட்டத்தில் அவன் கலக்கையில் அவன் முதுகைப் பார்த்துக்கொண்டே கெளரி நின்றாள். “கெளரி, எங்கேடி போயிட்டே? பருப்புத் தேங்காயை எங்கே வெச்சுட்டே?” என்று ஒரு குரல் கத்திற்று. கெளரி அவ்விடம் விட்டகன்றாள். அவள் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. அவள் முகமே ஒரு முகமூடி.