பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜனனி ❖15

"அடியே, குழந்தையை எடுடீ. இங்கே சாமானைக்

கொட்டறாள்-”

“இப்போ எந்தக் குழந்தையை வச்சுக்கச் சொல்றேள்?

உங்கள் குழந்தையையா? என் குழந்தையையா?”

அம்மாளுக்கும் ஜனனிக்கும் எப்படியும் ஒட்டவில்லை. அவளுக்குள் ஏதோ ஒன்று அக்குழந்தைக்கு அஞ்சியது.

அவளுக்கே என்னவென்று தெரியவில்லை. கண்டெடுத்த குழந்தை என்பதனாலோ என்னவோ, நினைவுக்குக்கூடப் பிடிபடாத ஒரு அவநம்பிக்கை அதன்மேல் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால் அவளுள் இன்னொரு குரல் இந்த அவநம்பிக்கைக்கு எதிராக ஒலமிட்டது. ஆனால் அந்த அவநம்பிக்கையே அந்தக் குரலை அமுக்கித் திணற அடித்தது. பிறகு அவளுக்கே ஒரு குழந்தை பிறந்தது. அப்போது உள்குரலை, அந்த அவநம்பிக்கை ஒரே மூச்சாய்க் கொன்று விட்டது. ஆனால் அம்மாளின் மனப்போராட்டத்தை ஜனனி எப்படி அறிவாள்? அவள் தன் மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஜனனிக்கும் பால் பசி எடுக்கும். மடிமீது ஏறுவாள். அம்மாளுக்கு ஏனோ மனம் வரவில்லை. முதல் கொஞ்ச நாட்களுக்கு வேறு பராக்குக் காட்டியோ, அல்லது பசும்பாலையூட்டியோ ஏமாற்றி வந்தாள். ஆனால் ஜனனி, தன்னிடம் பால் குடிப்பதற்காகத் திரும்பத் திரும்ப மடிமீது ஏறும் விடாமுயற்சியையும் தீர்மானத்தையும் கண்டதும், உள்ளுற இன்னதென்று சொல்ல இயலாத ஒரு பயமும், அப்பயத்தின் மூலமாகவே ஏற்படும் கோபமும் எழுந்தன. போனால் போகிறது. ஒரு தரந்தான் இடங் கொடுப்போமே என்று ஏன் தோன்றவில்லை என அவளுக்கே தெரியாது. அவளை ஆட்டிய பயம் தலைதூக்கி நிற்கையில், அவள் என்ன செய்ய முடியும்?