பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46 * லா. ச. ராமாமிருதம் ஜனனி லேசில் அவளை விடுவதாக இல்லை. ஒருநாள் மாலை அம்மாள், மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண்டிருக்கையில், தைரியமாய் மடிமீது ஏறி, மார்புத் துணியைக் கலைத்தாள். அம்மாளுக்கு ஆத்திரம் மீறிவிட்டது. அவளை இழுத்து எதிரே உட்கார வைத்து, தான்தோணிப் படையே என்று வைது, முதுகில் இரண்டு அறையும் வாங்கிவிட்டாள். குழந்தை ஓவென்று அலறினாள். ஐயர் அறையினின்று ஓடிவந்து அவளை வாரியணைத்துக் கொண்டார். அம்மாள் ஆங்காரத்துடன், மார்போடு ஒட்டிக்கொண்டிருந்த தன் மகனையும் பிடுங்கி அவனையும் அறைந்துவிட்டு, சமையலறையில் போய் எதையோ உடைத்தாள். அவள் காரியம் அவளைச் சுடும் வேதனை அவளுக்குத் தாங்க முடியவில்லை. ஐயர் வாய் அடைத்துப்போய்த் தவித்தார். கண்களில் ஜலம் ததும்பிற்று. ஜனனி இப்பொழுது விளக்கெதிரில் படுத்துக்கொண் டிருக்கிறாள். அழுது, அழுத களைப்பில் தூங்கி, விழிப்பு வந்ததும் மறுபடியும் அழுது அழுது முகமே வீங்கிவிட்டது. இந்தப் புது அநுபவம் அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது. விளக்குச் சுடர் பொறி விடுகிறது. "ஜனனி, உனக்குச் சொல்ல வேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளே யன்றி, குடிப்பவள் அல்ல; உலகில், தான் ஈன்ற கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் கடயம் போட்டு விடுவார்கள். உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தை யைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான்