பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை




ஜாதி ஒழிப்பும்
மொழிப் பிரச்சினையும்

திருச்சி நகரப் பொதுமக்களே! அன்புள்ள தோழர்களே!

கடந்த நான்கு நாட்களாக மகாநாடு நடத்தி, அதில் நிறைவேற்றிய தீர்மானத்தை விளக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இந்த மகாநாடு கூட்டப்பட்ட சந்தர்ப்பத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எனக்கு முன் பேசிய தோழர்களும் கூறினார்கள். நானும் கூறுகிறேன்.


இது கம்யூனிஸ சகாப்தம்

வால்டர் லிப்மன் யார் என்பது "ஹிந்து" பத்திரிகை படிப்பவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகா உலகிலே தலைசிறந்த அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர், அவரது கட்டுரைகளை ஹிந்து பத்திரிகையில் படித்தவர்கள் அநேகர் இங்கு இருப்பார்கள். வால்டர் லிப்மனை மென்னஸோடா என்ற அமெ ரிக்க பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தார்கள். 'மயக்கத்தின் மரணம்' என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அவர் கூறியதை அப்படியே சொல்லுகிறேன், கேளுங்கள் :

“எகிப்து நாட்டில் தாலமி என்ற வான நூல் வல்லுனர் இருந்தார். அவர், பூமி பிரபஞ்சத்தின் மையமாக இயங்குகிறது என்றார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த இதாலிய வான நூல் வல்லுனரான கோப்பர் நிகஸ் என்பார், “பூமி சூரிய மண்டலத்தில் ஒரு கிரகம் மாத்திரமே” என்று கூறினார். இந்த மாறுதலைப் போல், சிறிது காலத்துக்கு முன் வரையில் அரசியல் பிரபஞ்சத்தின் மையமாக விளங்கிய மேலை நாடுகள், இன்று விரிவடைந்துள்ள சூரிய மண்டலத்தில் ஒரு கிரகமாகிவிட்டது. அமெரிக்காவும் அவற்றில் ஒரு கிரகம், வேண்டுமானால் பெரிய கிரகம் என்று கூறலாம். அவ்வளவு தான்” என்றார் லிப்மன்.

தமிழ்ப் பெருங்குடி மக்களே! முதலாளித்துவ விமர்சகனான வால்டர் லிப்மனை இப்படிக் கூறும்படி நிர்ப்பந்திக்கக் கூடிய ஒரு சகாப்தத்தில் இங்கே நாம் கூடியிருக்கிறோமென்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.