1. அக்கினிப் பிரவேசம்
மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது...
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர்.
—வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
"ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.
வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது.
"பை... பை..."
"ஸீ யூ"