2. நந்தவனத்தில் ஓர் ஆண்டி
தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது.
அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான்.
அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம்.
ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள்.
ஆண்டி 'ஒரு மாதிரியான' ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை 'ஒரு மாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான்.
அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...”