________________
அந்தரங்கம் புனிதமானது 51 என்று படபடவென்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் அவன் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தான். அவன் மனசில், * அவள் அழுவாளோ, அழுதுகொண்டே அவரைப்பற்றிக் குத்திக் குடைந்து எதையாவது கேட்பாளோ. ஆத்திரப்பட்டு அந்தத் துரோகமிழைத்த கணவனைச் சபிப்பாளோ, தான் பல காலம் சந்தேகப்பட்டு மனசில் வைத்துக் குமுறிக்கொண்டு மானத்துக்கு அஞ்சி மறைத்து வைத்திருந்த விஷயம் மகன் வரைக்கும் 'தெரிந்துவிட்டதே என்று அவமானத்தால் சாம்பி விடுவாளோ?' என்று அஞ்சியே ஒரு குற்றவாளி மாதிரி அவன் அவளிடமிருந்து தப்பியோட யத்தனித்தான். வேணு!" என்று அமைதியான, உணர்ச்சி மிகுதியால் சற்றுக் கனத்துவிட்ட அவனது தாயின் குரல் அவனைத் தடுத்தது. அவள் முகத்தில் அவன் எதிர்பார்த்த எந்தக் குறியுமில்லாமல் அவள் மிகுந்த கனிவுடன் புன்னகை காட்டி " உட்காரு" என்றதும் நாற்காலியிலிருந்து எழுந்த வேணு மீண்டும் உட்கார்ந்தான். "நீ ஏதோ உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்னை எதையோ பேசப் போறன்னு நான் நெனைச்சேன். உன் அப்பாவைப் பத்திய பிரச்னையா அது ! .. நல்ல வேடிக்கை!" என்று அவள் கசிந்து சிரித்தாள். " அப்பிடின்னா உனக்கு ஏற்கனவே அதெப் பத்தி யெல்லாம் தெரியுமா?" என்று முனகுவது போல் கேட்டான் அவன். நான் அதைப் பத்தி யெல்லாம் தெரிஞ்சிக்க விரும்பினதில்லே வேணு"... என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினாள் அவள். அவள் தொடர்ந்து சொன்னாள் : "இதோ பார். அவர் உன் அப்பாங்கிறது எவ்வளவு உண்மையோ என் புருஷங்கிறது எவ்வளவு உண்மையோ-அவ்வளவு உண்மை அவர் ஒரு புரபசர்ங்கிறதும், அவர் ஒரு பெரிய அறிவாளி, படிப்பாளி, சமூக அந்தஸ்து மிக்கவர்ங்கரதும்... இல்லியா ?..." அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவளே சொன்னாள்: 'நீ எது எதுக்காகவெல்லாம் உன் அப்பாவை நினைச்சுப் பெருமைப்படலாமோ அதையெல்லாம் விட்டுட்டு, எதைப்பத்தி உனக்கு முழுசாத் தெரியாதோ, எது ரொம்பவும் அந்தரங்கமானதோ அதைக் குடைஞ்சு வருத்தப்படறதும் அவமானப்படறதும் சரின்னு தோணுதா உனக்கு?"