________________
58 ஜெயகாந்தன் சிறுகதைகள் இருவரும் பேசும் திறன் இழந்து, பாசத்தோடு ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டனர். பட்டு...' 'ருக்கு...' என்று ஒருவர் பெயரை மற்றவர் மௌனமாக அழைத்துக் கொள்ளும்போது, பரஸ்பரம் இருவர் முகத்திலும் மனம் நிறைந்த புன்னகையின் விகஸிப்பும் கைகளின் இணைப்பில் படிப்படி யான இறுக்கமும் விளைந்தன. சிறிது நேரம கும்பலிலிருந்து ஒதுங்கி ஓர் ஓரமாய் நின்ற இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ளும்முறையில் சில வார்த்தை கள் பேசிக் கொள்கையில், தங்களில் யாருக்குமே அவசர காரியம் ஏதுமில்லை என்று உணர்ந்தபின், வசதியாய் இருந்து பேச இடம் தேடியே அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர். ஓட்டலின் தனியறையில் வந்து எதிர் எதிரே அமர்ந்தபின் ஒருவரை யொருவர் தீர்க்கமாயும் அவசரமில்லாமலும் பார்த்துக் கொள்ள முடிந்தது; அத்துடன் கண்ணாடியில் தெரியும் தத்தமது உருவங்களுடன் பக்கத்திலுள்ள ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் நேர்ந்தது ஏதும் திடீரென இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பலமாகச் சிரித்துக் கொண்டனர் அந்தச் சிரிப்பின் இறுதியில் இருவர் முகத்திலும் உள்ளார்ந்த ஒரு சோகமே படர்ந்தது. அவர்கள் இருவரிடத்தும் மகிழ்ச்சிக்குரிய மா ற்றங்கள் இல்லை ருக்குவின் - முந்தானையால் இழுத்து மூடப்பட்டிருந்த கழுத்து வெறிச் சென்றிருந்தது. பட்டுவின் கழுத்தில பகட்டானதும் மட்டமானதுமான முத்துமாலை கிடந்தது. ருக்குவின் நெற்றியில் வட்டமான குங்குமப்பொட்டு, பட்டுவின் நெற்றியில் செஞ்சாந்துத் திலகம். இருவர் அணிந்திருந்ததும் சாதாரண வாயில் புடவைகளே : எனினும் உடுத்தியிருந்த விதத்தில்தான் எத்தனை வித்தியாசம்! சாயம் போன தனது நீலப் புடவையினால் போர்வையிட்டது போல் உடலை மூடி மறைத்திருந்த ருக்கு சேலைத் தலைப்பை இடுப்புச் செருக வில் இருந்து எடுத்து, பிடரியிலும் கழுத்துக்கடியிலும் கசிந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டபின் தன் கையில் நீண்ட சுருணையாக வைத்திருந்த ஒரு காகிதத்தை மேஜையின் மேல் வைத்து விட்டு, தலைக்குமேல் சுழலும் மின்சார விசிறியின் காற்றை அனுபவித்தாள். அவள் முகம் சுத்தமாய், வெண்மையாய், மங்கி ஒளியிழந்திருந்தது. பட்டுவின் முகத்தில் அப்பியிருந்த பௌடரின் மேல் வியர்வை பூத்திருந்ததால் முகமெல்லாம் திட்டுத் திட்டாய் இருந்தது. அவள்