பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 35




ஒரு புதினத்தில் சித்திரிக்கப்படுகிற ஒரேயொரு நிகழ்ச்சி கூட, ஒரேயொரு நெகிழ்ச்சி கூட சம்பந்தப்பட்ட பாத்திரத்தின் தனித்தன்மையைச் சரிந்து விடாமல், தனியாகச் சம்பந்தப்படுத்திக் காட்டப் பெரிதும் உதவும் என்பது என் கருத்து, கணிப்பு. வாழ்க்கை தானே நாவல் ? இவ்வகையில் பிரபுவின் கெட்டழிந்த வாழ்க்கை, கங்காவை வாழ்க்கையிலே கெட்டழியச் செய்து விட்டதன் காரணம் கொண்டும் இங்கே, தொடரும் கதையாக நீடிக்கிறது : நீட்டிக்கிறது.

ஆனால்—

“என் லைஃப்லே நான் கெடுத்த ஒரே பெண் நீ தான் கங்கா !” சுயதரிசனத்தால் பிரபுவின் உந்திக் கமலத்தினின்றும் வெளியேறி அவனைத் தனிப்படுத்திப் பிரித்துக் காண்பிக்க உதவிய குற்ற உணர்வின் இதே வாய்மொழி தான், வாய்மை மொழியாகி அவனைச் சமூகத்தின் சந்நிதானத்திலே குற்றவாளியாகவும் ஆக்கி விட்டது அல்லவா ?

நாம் பிரபுவுக்காக அனுதாபப்பட வேண்டியவர்களாகவும் ஆகி விடுகிறோம்.

ஆனால், சமுதாயமோ இதே பிரபுவின் பேரில் ஆத்திரப்படுகிறது :- குற்றம் புரிந்தவனைத் தண்டிக்கவும் செய்து விடுகிறது - பிரபுவின் வாழ்க்கை கெட்டுக் குட்டிச் சுவராக ஆகிவிடுகிறதே, போதாதா ?

மற்றபடி, கங்காவிடம் ஒரு மனநிலையில் அவளும் மஞ்சு மாதிரியே தனக்கு ஒரு மகள் மாதிரிதான் என்றெல்லாம் உதவாக்கரையான பிரபு வாதப் பிரதிவாதத்தில் என்னென்னவோ பேசுகிறானே, அவை யெல்லாம் மது மயக்கத்தால் வெளிப்பட்ட மயக்க மொழிகளாகவே ஒவிக்கும் எதிரொலிக்கும் ! எல்லாம், போலியான ஒரு மனிதனின் போலித்தனமான பிதற்றல்கள், உளறல்கள் தாம் !... -