பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘டானா'முத்து/11


எல்லா வழியிலும் முத்து கெட்டான்!
பொல்லாத வனானான்! வயசு வளர்ந்தது!
நல்லோர் அவனை நாட வில்லை!
எல்லோரும் அவனை எதிரியாய் எண்ணினர்!

கோவில் காளையாய்க் கொழுத்த முத்துச்
சாவி பெட்டியுடன் அத்தை பணத்தைப்
பாவிப் பஞ்சு போதனை யாலே
தாவிப் பறிக்கத் திட்டம் போட்டான்!

அத்தை பார்வதியின் நெருங்கிய தோழி
ரெத்தி னாம்பாள்தான் ரகசிய மாக
முத்து - பஞ்சு மோசடித் திட்டம்
அத்தனையும் கூறி எச்சரித்து விட்டாள்!

மூக்கன் பட்டி புஞ்சைக் கரம்பில்
ஏக்கர்கள் மூன்றை அத்தை வாங்கி
சாக்கிர தையாகச் சாசனம் முடித்தாள்!
போக்கிரி முத்தோ ஏமாந்து போனான்!

காட்டுப் புஞ்சையைக் கழனியாய் ஆக்கி
மேட்டை நிரவி; வாய்க்கால் வெட்டி;
பூட்டுத் திறப்புடன் வேலியும் அடைப்பும்
போட்டே அத்தை பொறுப்புடன் காத்தாள்!