பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50/வயலூர் சண்முகம்


'கணவனின் குருடு தீராதா?
கனிபோல் குழந்தை பிறக்காதா?
பணமும், சொத்தும் சேராதா?
பயனுள வாழ்வும் சிறக்காதா'?


என்றே ஏங்கி சுந்தரிதான்
ஏற்றக் கணவன் கந்தனுடன்
நன்றே பற்பல நோன்புகளை
நாளும் முறையாய் நோற்றாளே!


பத்தினித் தவந்தான் பலிக்காதா?
பண்ணிடும் புண்ணியம் கெலிக்காதா?
உத்தமன் கந்தன் பக்தியதும்
உண்மை திண்மை நிறைந்ததன்றோ?


எல்லாம் வல்ல இறைவனவன்
இரக்கம் கொண்டான் அவர்கள்பால்!
நல்ல நேரம் வந்து விட்டால்
நடக்கா ததுஎது இவ்வுலகில்...?


அந்தத் தம்பதிகள் செய்தவத்தை
அரியது; பெரியது எனமெச்சி
வந்தான் இறைவன் ஓர்சாது
வடிவம் கொண்டே, ஓர்நாளில்!