பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78/வயலூர் சண்முகம்


குட்டிப் பூனை இரண்டு - வீணே
கட்டித் தரையில் புரண்டு
போட்டது பாரேன் சண்டை! - அறை
வீட்டுச் சன்ன லண்டை!

எட்டிப் பார்த்தக் கிழவி - கைகள்
நெட்டி முறித்துத் திட்டித்
தாவி ஓடிப் பிடித்தாள்! - அவற்றை
ஆவி நோக அடித்தாள்!

வாலைப் பிடித்து ஒன்றைச் -சிறு
காலைப் பிடித்து ஒன்றை
வாசல் வழியே எறிந்தாள்! - கதவை
ஏசித் தாழ்ப்பாள் இட்டாள்!

வானம் வெடித்தது இடியை! - மின்னல்
வாணம் ஒடித்தது கொடியை!
கருத்த மேகம் குவிந்தது! - ரொம்பப்
பெருத்த மழையும் பொழிந்தது!

ஊதிச் சீறும் காற்றில்! - பூனைகள்
மோதித் துடித்தன சேற்றில்!
திருடித் தின்ற பாவம்! - அதனால்
தெய்வத் துக்கும் கோபம்!

★★★★★