பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

99


‘ஒருவன் தனக்கு நன்றாகப் பழகிப் பண்பட்டுப் போனதை விட்டுவிட வேண்டியிருப்பது வருந்தத்தக்கதுதான். ஆனால் வேறு எதுவும் செய்வதற்கில்லை. புதிய விஷயங்களில் நானும் பழகிவிடுவேன்’ என்று அவன் நினைத்தான்.

‘பாவங்கள்?’ என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு. அவனது குடிபோதை பற்றியும், குடியில் காலியான பணத்தைப் பற்றியும் அவன் நினைத்தான். தான் தன்னுடைய மனைவிக்குத் தீமை இழைத்தது பற்றியும், சபித்து வசை கூறும் பழக்கம் பற்றியும் நினைத்தான். மாதாகோயிலையும் விரத தினங்களையும் புறக்கணித்து வந்தது பற்றியும் நினைத்தான். ‘பாவ மன்னிப்புப் பெறும்போது பாதிரியார் கண்டித்த எல்லா விஷயங்களையும் அவன் எண்ணிப் பார்த்தான். ‘நிச்சயமாக இவை பாவங்கள்தான். ஆனால் இவற்றை எல்லாம் நானாகவே என் மீது சுமத்திக்கொண்டேனா? கடவுள் என்னைப் படைத்த விதமே அப்படித்தானே! அது சரி; பாவங்கள்! நான் எங்கே தப்பி ஓடுவது?’

ஆகவே ஆரம்பத்தில், அவன் தனக்கு அன்று இரவில் என்ன நேரிடலாம் என்று எண்ணிப்பார்த்தான். அதற்குப் பிறகு அவன் அத்தகைய எண்ணங்களுக்கே இடம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் தாமாகவே தலைதூக்கி உள்ளத்தில் படர்ந்த நினைவுகளை மட்டுமே எண்ணியிருந்தான். மார்த்தாவின் வருகை பற்றியும், உழைப்பவர்களிடம் நிலை பெற்றுள்ள குடிப்பழக்கம் பற்றியும், தான் குடிப்பதைவிட்டு விட்டது பற்றியும் அவன் எண்ணினான். அதன்பிறகு இந்த இரவுப் பிரயாணம் பற்றியும், டாராஸ் குடும்பத்தைப் பற்றியும், அவ்வீட்டில் எழுந்துள்ள பாகப்-