பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

டால்ஸ்டாய் கதைகள்

நோக்கி முன்னேறிச் சென்ற போது அவன் பிரயாணம் செய்த திசையை அடியோடு மாற்றி விட்டான்; இப்பொழுது அவன் நேர் எதிரான திசையில் முன்நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். தனக்கிருந்த அவசரத்தில் அவன் இந்த உண்மையைக் கவனிக்கவே இல்லை. எந்தத் திக்கில் குடிசை இருந்ததாக அவன் நம்பினானோ அதே திசை நோக்கித்தான் இன்னமும் பிரயாணம் செய்வதாக வாஸிலி நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் குதிரை வலது பக்கம் செல்ல முயன்றது. அவனோ அதை இடது புறமாக ஒதுக்கியே வழிகாட்டினான்.

மீண்டும் அவனுக்கு முன்பக்கத்தில் கறுப்பாக எதுவோ தோன்றியது. மறுபடியும் அவன் உவகை பெற்றான், இப்பொழுது நிச்சயமாக ஒரு கிராமம் வந்து விட்டது என்ற நம்பிக்கையினால். ஆனால், மரங்கள் மண்டிய அதே வயல் வரப்புதான் மறுபடியும் காட்சி அளித்தது. காற்றில் சிக்கி மூர்க்கமாக அல்லாடி, அவன் உள்ளத்திலே காரணமற்ற பீதியை எழுப்பிய அதே மரக்கிளைகள் தான் மீண்டும் தென்பட்டன. பழைய மரக்கிளைகள் என்பது மட்டுமே முக்கியமல்ல. அம்மரத் தொகுப்பிற்குப் பக்கத்தில் குதிரையின் காலடித் தடம் ஒன்று அரை குறையாகப் பனிமூடிக் கிடந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் நின்று, குனிந்து, கவனத்தோடு உற்றுநோக்கினான். பனியினால் மூடியும் மூடாமலும் தென்பட்ட குதிரையின் காலடித் தடம்தான் அது. அவனது குதிரையின் அடிச்சுவடுகளைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆகவே அவன் கொஞ்ச தூரம் வட்டமிட்டுச் சுற்றி வந்திருக்கிறான்