இரண்டு பேர்
105
என்பது தெளிவாயிற்று. ‘இதே ரீதியில் நான் செத்தொழிந்து போவேன்!’ என்று அவன் நினைத்தான். தனது பீதிக்கு இடம் தர விரும்பாதவனாய், பனிபடர்ந்த அந்தகாரத்தினூடே உறுத்து நோக்கியபடியே அவன் மேலும் அதிகமாகக் குதிரையை முடுக்கினான்.
காரிருளில் அவ்வப்போது மின்வெட்டித் தோன்றி. மறையும் ஒளிச் சிதறல்களை மட்டுமே கண்டான் அவன். நாய்களின் குரைப்பையோ, அல்லது ஓநாய்களின் ஊளைக் கூச்சலையோ கேட்டதாக அவன் ஒரு சமயம் எண்ணினான். ஆனால் அந்த ஓசைகள் மிகவும் தீனமாகவும் தெளிவற்றும் ஒலித்ததால், உண்மையிலேயே அவற்றை அவன் கேட்டானா; அல்லது கேட்டதாக வெறுமனே நினைத்துக் கொண்டானா என்று அவனுக்கே தெரியாமல் போய்விட்டது. எனவே அவன் நின்று, மிகுந்த சிரத்தையோடு கவனித்தான்.
நடுக்கம் தரக் கூடிய, செவிடு படச் செய்கிற கூச்சல் எதுவோ திடீரென்று அவன் காதுகளின் அருகே எதிரொலித்தது. அவனுக்குக் கீழே எல்லாமே ஆடிக் குலுங்கி நடுங்கியது. அவன் குதிரையின் கழுத்தைப் பற்றினான். ஆனால் அதுவும் உடல் நடுக்கம் கண்டு நின்றது. மீண்டும் அந்தப் பயங்கர ஓசை முன்னிலும் அதிகப் பயங்கரமாகப் பெருகி ஒலித்தது. சில கண நேரம் வாஸிலிக்குத் தன்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
முக்கார்ட்டிதான் அவ்விதம் குரல் எழுப்பியது. தனக்குத் தானே ஊக்கம் ஊட்டுவதற்காகவோ, அல்லது உதவியை அழைத்தோ, அது உரக்க எதிரொலி எழுப்பும் விதத்தில் கனைத்துக்கொண்டது.