பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

டால்ஸ்டாய் கதைகள்

கனவாக இருக்குமோ?’ என்று தான் அவன் நினைத்தான். அதனால் விழித்து எழ அவன் பெருமுயற்சி செய்தான். பயன் எதுவும் ஏற்படவில்லை. உண்மையான பனி தான் அவன் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது; அவனை மூடிவிட முயன்றது; உறையை இழந்து விட்ட அவனது வலது கரத்தைக் குளிரால் விறைக்க வைத்தது. நிஜமான பனிப்பாலை தான் அது. அங்கே, அந்த மரக்கூட்டம் போலவே, அவனும் தவிர்க்கமுடியாத—மிகத் துரிதமான–அர்த்தமற்ற அழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்படி தன்னந்தனியனாய் விடப்பட்டிருந்தான்.

‘சொர்க்கத்து ராணியே! தன்னடக்கத்தின் போதகராகிய பரிசுத்தத் தந்தை நிக்கொலஸ் அவர்களே!’ என்று அவன் முணுமுணுத்தான். முந்திய தினத்தில் நடைபெற்ற ஆராதனையும், தங்கமுலாம் பூசிய சட்டத்தினுள் காட்சி தந்த புனித விக்ரகத்தின் கறுத்த முகமும், அந்த விக்கிரகத்தின் திரு முன்னிலே கொளுத்தி வைக்கப்படுவதற்காக அவன் விற்பனை செய்த மெழுகுவர்த்திகளும் அவனது நினைவில் எழுந்தன. அந்த மெழுகு திரிகள் கொஞ்சம் கூட எரிந்திராத நிலையிலே உடனடியாகவே தன்னிடம் வந்து சேர்ந்தது பற்றியும், அவற்றை அவன் பெட்டியில் வைத்துப் பூட்டியதையும் நினைத்தான்[1]


  1. ‘சர்ச் வார்டன்’ (மாதாகோயிலைப் பராமரிக்கிறவன்') என்ற முறையில், பக்தர்களுக்கு மெழுகு திரிகளை அவன் விற்பனை செய்தான். விக்கிரகங்களின் முன்னர் ஏற்றி வைப்பதற்கு உரியவை அவை. ஆராதனை முடிவுற்றதும் அம் மெழுகுவர்த்திகளைச் சேகரித்து அவன் சேமித்து வைப்பான். மறுபடியும் அவற்றை பக்தர்களுக்கு விற்பதன் மூலம் கோயிலுக்கு அதிகப்படியான வருமானம் கிட்டுவதற்கு இது துணை புரிந்தது.