பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

டால்ஸ்டாய் கதைகள்

அவன் ஓடினான். பனி ஆழமாக விழுந்திராத இடங்களில் குதிரையின் காலடித் தடம் தெளிவாகப் புலனாகவே இல்லை. ‘நான் ஒழிந்தேன்! நான் பாதையைத் தவறவிட்டு விடுவேன்; குதிரையையும் பிடிக்கமாட்டேன்’ என்று நினைத்தான் அவன். எனினும் அவ்வேளையில் அவன் கறுப்பாக எதையோ கண்டான். அது குதிரைதான். முக்கார்ட்டி மாத்திரமல்ல. வண்டியும், கைக்குட்டை ஆடிப் பறக்கும் சட்டத்தோடு, காட்சி தந்தது.

குதிரை முக்கார்ட்டி, சாக்குத் துணியும் வார்ப்பட்டையும் ஓர் புறமாகச் சுற்றிப் பின்னிக்கிடக்க, நின்றது. அது பழைய இடத்தில் நிற்காமல் இப்பொழுது வண்டிச் சட்டங்களுக்கு மிக அருகாமையில் நின்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தது. தலையிலிருந்து தொங்கிய கடிவாள வார்களை அது தனது கால்களால் மிதித்துக் கொண்டிருந்ததனால் தலை கீழ் நோக்கியே இழுக்கப்பட்டது.

முன்பு நிகிட்டா தவறி விழுந்த கணவாய்க்குள்ளேதான் வாஸிலியும் விழுந்திருந்தான்; முக்கார்ட்டி அவனைச் சுமந்தபடி வண்டியை நோக்கித்தான் திரும்பி வந்து கொண்டிருந்தது; குதிரையின் முதுகிலிருந்து அவன் கீழே குதித்த இடம் வண்டி நின்ற இடத்திலிருந்து ஐம்பது அடிகளுக்குள்ளாகவே இருந்தது என்று இப்போது விளங்கி விட்டது.

9

தட்டுத் தடுமாறி மறுபடியும் வண்டியை அடைந்ததும் வாஸிலி ஆன்ட்ரீவிச் அதைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அசைவற்று நின்றான்.