பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

115


‘அது தான் நமது வழி!’ என்று அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். அதிசயமுள்ள, பக்தி பூர்வமான, இரக்க உணர்ச்சியை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். தனது கோட்டு ரோமத்தின் மேல் கண்களைத் துடைத்தும், காற்றினால் அடிக்கடி விலக்கப்பட்ட மேல் சட்டையின் வலதுபுற விளிம்பை முழங்காலுக்குக் கீழே திணித்துக் கொண்டும், அவன் அதே நிலையில் வெகு நேரம் கிடந்தான்.

எனினும், தனது ஆனந்தமயமான நிலைமையை யாருக்காவது எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசைத் துடிப்பு அவனுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே ‘நிகிட்டா!’ என்று கூப்பிட்டான் அவன்.

‘சுகமாக இருக்கிறது. சூடாகவும் இருக்கிறது’ என்று ஒரு குரல் அடியிலிருந்து மேலெழுந்தது.

'பார்த்தாயா நண்பா! நான் அழிந்து போக இருந்தேன். நீயும் உறைந்து மடிந்திருப்பாய். நான் வந்து .......,

ஆனால் மீண்டும் அவன் வாய் துடிக்கத் தொடங்கியது. கண்களில் நீர் கட்டியது. அவனால் மேலும் பேசமுடியவில்லை. ‘நல்லது. பரவாயில்லை. நான் எதை உணர்ந்தேன் என்கிற என்னைப்பற்றிய உண்மை எனக்கே தெரிகிறது’ என்று அவன் எண்ணினான்.

அதற்குப் பிறகு அவன் மௌனமாக நெடுநேரம் அப்படியே கிடந்தான்.