பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

டால்ஸ்டாய் கதைகள்

அவ் வயோதிகனுக்குக் காதுகள் தெளிவாகக் கேட்காவிட்டாலும்கூட, தனது மகனைவிட நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

‘இல்லை. இது போன்ற தானியத்தை நான் எனது வயலில் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை. வாங்குவதுபற்றிச் சொல்லப் போனால், என் காலத்தில் பணம் என்பது பழக்கத்துக்கு வரவேயில்லை. ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய தானியத்தைப் பயிரிட்டான். அவசியம் ஏற்படுகிறபோது பரஸ்பரம் பங்கிட்டுக் கொள்வதும் உண்டு. இதுமாதிரி தானியம் எங்கே விளைந்தது என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பயிரிட்ட தானியம் இந்தக் காலத்துத் தானியத்தைவிட அளவிலும் பெரிதாக இருந்தது. மாவும் அதிகமாகக் கிடைத்தது. ஆனாலும் இத்தகைய தானியத்தை நான் பார்த்ததேயில்லை. என் தந்தை காலத்தில் தானியம் ரொம்பவும் பெரியதாக விளைந்தது, மிக அதிகமாக மாவும் இருந்தது என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் அவரை விசாரிப்பது நல்லது’ என்று அவன் சொன்னான்.

ஆகவே ராஜா அந்தக் கிழவனின் தகப்பனைத் தேடி ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அவனையும் கண்டுபிடித்து விட்டார்கள். அவனும் மன்னன் முன்னால் அழைத்து வரப்பட்டான்.

அவன் ஊன்றுகோலின் உதவி இல்லாமலே தாராளமாக நடந்து வந்தான். அவன் பார்வை அருமையாக இருந்தது. காதுகள் நன்றாகக் கேட்டன. பேச்சும் தெளிவாக இருந்தது. அவனிடம் அரசன் அந்தத் தானியத்தைக் காட்டியதும், அவன் அதை வாங்கிப் பார்த்தான்; தனது கையில் வைத்து உருட்டினான்.