பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

139

“இனிமேல் நாம் என்ன செய்யலாம்?” என்று அவள் கேட்டாள்.

“குற்றம் எதுவும் செய்யாத ஒருவன் அழிந்து போகாதபடி காப்பாற்ற வேணும் என்று கோரி ஜார் மன்னனுக்கு மனுச் செய்யவேண்டும்.” தான் அவ்விதம் ஒரு மனு தயாரித்து ஜாருக்கு அனுப்பியதாகவும், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் அவள் அறிவித்தாள்.

அக்ஸனோவ் மறுபேச்சு பேசவில்லை. அவன் முகம் வாட்டத்துடன் தாழ்ந்தது.

அவன் மனைவி சொன்னாள்: “உங்கள் தலைமுடி நரைத்துப் போனதாக நான் சொப்பனம் கண்டேனே, ஞாபகம் இருக்கிறதா? அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை, நீங்கள் அன்றைக்கு பயணம் தொடங்கி இருக்கக்கூடாது.” பிறகு அவனது தலைமயிரினூடே தன் விரல்களை ஓடவிட்டவாறே அவள் கேட்டாள் “எனது அருமை வான்யா, உங்கள் மனைவியிடம் உண்மையைச் சொல்லுங்கள். அந்தக் காரியம் செய்தது நீங்கள் இல்லையே?” என்று.

"அப்படியானால், நீ கூட என்னைச் சந்தேகிக்கிறாயா!” என்றான் அக்ஸனோவ். அவன் முகத்தைத் தனது கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான். மனைவியும் மக்களும் அங்கிருந்து போய்விட வேண்டும் என்று காவல்காரன் வந்து தெரிவிக்கவே, அக்ஸனோவ் தனது குடும்பத்திற்குப் பிரிவு வணக்கம் அறிவித்தான். அவனுடைய இறுதி உபசாரம் அதுதான்.

அவர்கள் போய்ச் சேர்ந்ததும், மனைவி பேசியதை எல்லாம் எண்ணிப் பார்த்தான் அக்ஸனோவ். தனது